தடுத்து விசாரித்த காவல்துறையினர்: மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தை புறக்கணித்த உறுப்பினர்கள்

தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த உறுப்பினர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்ததால் கூட்டத்தை புறக்கணித்து அனைவரும் திரும்பிச் சென்றனர்.
தருமபுரியில் கூட்டத்தை புறக்கணித்த மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள்.
தருமபுரியில் கூட்டத்தை புறக்கணித்த மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள்.

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த உறுப்பினர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்ததால் கூட்டத்தை புறக்கணித்து அனைவரும் திரும்பிச் சென்றனர்.

தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான கடிதம் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கூட்டத்திற்கு பங்கேற்க மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக கூட்டம் நடைபெறும் வளாகத்திற்குள் வந்து கொண்டிருந்தனர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தருமபுரி நகர காவல்துறையினர் உறுப்பினர்களிடம் தடுத்து நிறுத்தி விசாரித்து அனுப்பினர்.

காவல்துறையினரின் இந்த நடவடிக்கை கண்டு அதிருப்தி அடைந்த உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்காமல் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் யசோதா மதிவாணன் செய்தியாளர்களிடம் கூறியது: தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் நடைபெற இருந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்க மொத்தமுள்ள 17 உறுப்பினர்கள் கூட்ட‌ வளாகத்துக்குள் வருகை தந்தோம். ஆனால், நாங்கள் யாரும் கேட்காமலேயே இந்த வளாகத்தில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். மேலும் காவல்துறையினர் எங்களை தடுத்து விசாரித்தனர். மொத்தமுள்ள‌ 17 உறுப்பினர்களும் அரசியல் கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம்.

இதுவரை இந்த வளாகத்தில் நடைபெற்ற எந்த கூட்டத்துக்கும் காவல்துறை பாதுகாப்பு கோரியதில்லை. தற்போது எங்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரிக்கின்றனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிக்கிறேம் என்றார்.

இதுகுறித்து மாவட்ட ஊராட்சி செயலாளர் மாரிமுத்து ராஜ் கூறியது: மாவட்ட ஊராட்சிக்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். அவர்களது கணவரோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ பங்கேற்கக் கூடாது என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி காவல்துறையினர் விசாரித்திருக்கலாம்‌. மேலும், கரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ளதால் கூட்டத்தை தவிர்க்க காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டம் தலைவரின் தலைமையில் நடைபெற உள்ளது. வேறெந்த நோக்கமும் இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com