முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் புதன்கிழமை காலை 6 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

நாமக்கல்: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் புதன்கிழமை காலை 6 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் மின்துறை அமைச்சருமான பி.தங்கமணி பள்ளிபாளையம் அருகேயுள்ள கோவிந்தம்பாளையம் கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தற்போது குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். 

இவர் கடந்த அதிமுக ஆட்சியில் பதவியில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாகவும், முறைகேடுகள் மூலம் சொத்து சேர்த்ததாக புகார்கள் வெளியானது. 

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முதல்கட்ட தகவல்கள் வெளியானது. 

இதனைத் தொடர்ந்து தங்கமணி வீட்டிற்கு புதன்கிழமை அதிகாலை வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழு முன்புற கதவை தாழிட்டு தங்களது விசாரணையை தொடங்கினர். 

பள்ளிபாளையம் மட்டுமின்றி தங்கமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் நாமக்கல், ஈரோடு, வேலூர், சேலம் , கரூர், திருப்பூர், கோவை, கர்நாடகம், ஆந்திரம் உள்பட தங்கமணி தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் புதன்கிழமை காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் 150க்கும் அதிமான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு அரசு கட்டடப் பணிகளை ஒப்பந்தம் எடுத்த பிரபல கட்டுமான நிறுவனத்திலும் இச்சோதனை நடைபெறுகிறது. 

ஈரோடு சூளை அருகேயுள்ள முனியப்பன்கோவில் சிவானந்தம் என்பவருடைய வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வரும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்.

சேலத்தில் சாலை அமைப்பதற்கான பணிகளை டெண்டர் எடுத்த தனியார் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. இவர்கள் அனைவரும் தங்கமணிக்கு நெருக்கமானவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

ஈரோடு சூளை அருகேயுள்ள முனியப்பன்கோவில் சிவானந்தம் என்பவருடைய வீட்டில் 5 லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2016 -220 மார்ச் வரை வருமானத்திற்கு அதிகமாக தங்கமணி, குடும்பத்தினர் ரூ.4.85 கோடி சொத்து சேர்த்துள்ளதாக நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சட்ட விரோதமாக சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துக்களை தங்கமணி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தங்கமணி மருமகன் தினேஷ் குமார் பெயரில் 100க்கும் அதிகமான லாரிகள் இயங்குகின்றன. தனியார் தொலைக்காட்சி ஒன்றின் இயக்குநராகவும் அவர் இருந்து வருகிறார். 

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வந்த கார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணியை தொடர்ந்து சோதனையில் சிக்கியுள்ள 5 ஆவது முன்னாள் அமைச்சர் தங்கமணி என்பது குறிப்பிடத்தக்கது. 

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையையடுத்து பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதி அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் தங்கமணி வீட்டின் முன்பாக திரண்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com