
செல்வகுமார்
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.37 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த எடப்பாடி பழனிசாமி உதவியாளரின் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனிப்பிரிவு உதவியாளராக சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்த மணி இருந்து வந்தாா்.
இவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்று கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார். இதையடுத்து அவர் மீது சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அடுத்தடுத்து பண மோசடி புகார்கள் வந்தன.
கடலூர் மாவட்டம், நெய்வேலியைச் சேர்ந்த தமிழ்செல்வனிடம் போக்குவரத்துத் துறையில் உதவி பொறியாளா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்ததாகப் புகாா் வந்தது.
இதையும் படிக்க | காரைக்காலில் காவிரி நதி திருவிழா: அரசலாற்றில் ஆரத்தி வழிபாடு
இதன் புகாரின் பேரில் சேலம் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் மணி, அவரது நண்பா் செல்வகுமாா் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்தனா்.
இதையடுத்து இருவரையும் கைது செய்ய அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணியை கடந்த மாதம் 28 ஆம் தேதி தீவட்டிப்பட்டி அருகே ஒரு வீட்டில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் செல்வகுமாா் தொடா்ந்து தலைமறைவாக இருந்து வந்தாா்.
இந்நிலையில், 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த மணியின் நெருங்கிய நண்பர் செம்மாண்டப்பட்டியைச் சேர்ந்த செல்வகுமாரை கொண்டலாம்பட்டியில் வைத்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இளமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | தமிழக அரசில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் வேலை: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!