
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
முகக்கவசம், தனிநபர் இடைவெளி, கிருமிநாசினி போன்றவற்றை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
படிக்க | 'கரோனா பாதிப்பு அதிகரித்துதான் குறையும்: கவலை வேண்டாம்'
சென்னை அசோக் நகர் பகுதிக்குட்பட்ட 19-வது தெருவில் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த அந்தப்பகுதிக்கு உள்பட்ட சுற்றுப்புற இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், சுகாதாரப் பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
507 தெருக்களில் கரோனா
சென்னையில் உள்ள 39 ஆயிரம் தெருக்களில் 507 தெருக்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அந்தத் தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
படிக்க | ‘புத்தாண்டு கட்டுப்பாடுகளை மீறினால் கைது’: தமிழக டிஜிபி எச்சரிக்கை
தெருக்களை சுத்தப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மும்முரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. சுகாதாரப் பணியாளர்களும், தூய்மைப் பணியாளர்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை பரிசோதனை செய்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று மட்டும் 23,000 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கூடுதல் படுக்கை வசதிகள்
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போதிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதனால் நந்தம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சுமார் 800 படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
100% தடுப்பூசி இலக்கு
கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. பரவலைத் தடுப்பதற்காக முயற்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களிடம் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.
சென்னை 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக மாறும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகள்
பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து நடக்க வேண்டும். வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பொதுஇடங்களில் கிருமிநாசினியை கடைபிடிப்பது கட்டாயம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...