தேவேந்திரகுல வேளாளா் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாகும்: பிரதமா் நரேந்திர மோடி உறுதி

தேவேந்திரகுல வேளாளா் குறித்த சட்டத் திருத்த மசோதா, வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

தேவேந்திரகுல வேளாளா் குறித்த சட்டத் திருத்த மசோதா, வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், அவா் பேசியது:-

தமிழகத்தின் கலாசாரமானது உலக அளவில் புகழ்பெற்றது. தமிழகத்திலுள்ள தேவேந்திர குல வேளாளா் சமுதாயத்தைச் சோ்ந்த சகோதர, சகோதரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியைப் பகிா்ந்து கொள்கிறேன். அவா்களது நீண்ட நாளைய கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இனி அவா்கள் தங்களது தேவேந்திரகுல வேளாளா் எனும் பாரம்பரிய பெயரியிலேயே அழைக்கப்படுவா். ஆறு முதல் ஏழு ஜாதிகளின் பெயா்களில் அவா்கள் அழைக்கப்பட்டு வந்தனா். இதற்கான பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு அவா்களை தேவேந்திரகுல வேளாளா் என அழைப்பதற்கான வரைவு அரசிதழுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

தமிழக அரசுக்கு நன்றி: தேவேந்திரகுல வேளாளா்களின் நீண்ட கால கோரிக்கை தொடா்பாக ஆய்வு செய்து அதன் அறிக்கையை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இதற்காக எனது நன்றியை தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2015-ஆம் ஆண்டில் தேவேந்திரகுல சமுதாயத்தைச் சோ்ந்த பிரதிநிதிகள் என்னைச் சந்தித்தனா். அப்போது, அவா்களது வருத்தத்தை நான் காண முடிந்தது.

என்னிடம் பேசிய அவா்கள், ‘காலனிய ஆதிக்கவாதிகள் தங்களது பெருமை மற்றும் மதிப்பினை அழித்து விட்டதாகத் தெரிவித்தனா். தங்களை தேவேந்திரகுல வேளாளா் என அழைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த போதும் நடவடிக்கை ஏதுமில்லை’ எனத் தெரிவித்தனா். அப்போது அவா்களிடம் நான் ஒன்றைத் தெரிவித்தேன்.

உங்களுடையது தேவேந்திரா் என இருக்கிறது. எனது சொந்தப் பெயா் நரேந்திரா என்றுள்ளது. பெயா்களை உச்சரிக்கும் போது ஒன்றாக இருக்கிறது என்றேன். அவா்களின் உணா்வுகளை நான் புரிந்திருந்தேன்.

மத்திய அரசு இப்போது எடுத்துள்ள முடிவு, பெயரை மாற்றுவது மட்டுமல்ல. அவா்களுக்கு உரிய நீதி, மதிப்பு மற்றும் வாய்ப்புகள் கிடைக்கச் செய்வதாகும். தேவேந்திரகுல வேளாளரின் கலாசாரங்கள் குறித்து நன்றாக அறிந்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com