திருவள்ளுவர் விருது, சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு

திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்படும் விருதுகளுக்கான விருதாளர்கள் பெயர்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருவள்ளுவர் விருது, சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு
திருவள்ளுவர் விருது, சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு


சென்னை: திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்படும் விருதுகளுக்கான விருதாளர்கள் பெயர்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தியுள்ளது. அவ்வகையில் திருவள்ளுவர் திருநாள் விருதுகள் மற்றும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்கான விருதாளர்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவ்வகையில், திருவள்ளுவர் திருநாள் விருதுகளாக: 2021ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது முனைவர் வைகைச்செல்வன் (முனைவர் வைகைச்செல்வன் அவர்கள் வைகைச் செல்வன் கவிதைகள், கனவோடு வெகுதூரம், திருக்குறள் நவீன உரை ஆகிய இவரது நூல்கள் ஆகும். வைகைச் செல்வன் அவர்கள் படைத்துள்ள ‘திருக்குறள் நவீன உரை’ என்னும் நூல் இளைய தலைமுறைக்கு வள்ளுவத்தைப் பற்றி நுணுக்கமாக எடுத்துரைப்பதனால், இந்நூலைப் பிற உரை நூல்களோடு ஒப்பிட்டு முனைவர் பட்ட மாணவர்கள் தம் ஆய்வுகளுக்கு எடுத்துக் கொண்டுள்ளனர்.)

2020ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது அ. தமிழ்மகன் உசேன், அண்ணல் அம்பேத்கர் விருது வரகூர் அ. அருணாச்சலம், பேரறிஞர் அண்ணா விருது அமரர் கடம்பூர் எம்.ஆர். ஜனார்த்தனன் (அமரர் கடம்பூர் எம்.ஆர். ஜனார்த்தனன் அவர்கள் சிறையில் அந்த இரவு’ (நாடகம்), ஓடும் இரயிலில் ஒருவன் (சிறுகதை) உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் பேரறிஞர் அண்ணா அவர்களின் தொண்டர் ஆவார். 1965-ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் போது, நெல்லை மாவட்டப் போராட்டக் குழுத் தலைவராக முன்னின்று களப்பணி நடத்தியுள்ளார். பல அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற விழாக்களில் கலந்துகொண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் பெருந்தொண்டைப் போற்றும் வகையில், அவரது நெறிபரப்பும் விதமாக உரைகளை நிகழ்த்தியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள் நெறியில் சமூக முன்னேற்றத்துக்காக பல்வேறு அறப்பணிகளை முன்னெடுத்துள்ளார்.)

பெருந்தலைவர் காமராசர் விருது முனைவர் ச. தேவராஜ் (முனைவர் ச. தேவராஜ் அவர்கள் அற இலக்கியம் பன்முகப்பார்வை, திருக்குறள் பன்முகப் பார்வை, இலக்கியங்களில் தமிழர் வாழ்வியல் தொகுதி 1 மற்றும் 2, காப்பிய இலக்கியம் பன்முகப் பார்வை தொகுதி 1 மற்றும் தொகுதி 2 ஆகிய 4 நூல்களை எழுதியுள்ளார்.)

மகாகவி பாரதியார் விருது கவிஞர் பூவை செங்குட்டுவன் (கவிஞர் பூவை செங்குட்டுவன் அவர்கள் கவியரசர் கண்ணதாசன் அவர்களால் பாராட்டப்பெற்ற இவர், 1967-ஆம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான திரைப்படப் பாடல்களையும், 4000க்கும் மேற்பட்ட தனிப்பாடல்களையும் எழுதியுள்ளார். 15க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களும், 30க்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களும், வானொலி நிகழ்ச்சிகளும், தொலைக்காட்சித் தொடர்களும், இரண்டு படங்களுக்கு மூலக்கதைகளும், மூன்று படங்களுக்குத் திரைக்கதை வசனம் மற்றும் பாடல்களும் இவரால் எழுதப்பெற்றுள்ளன.)

பாவேந்தர் பாரதிதாசன் விருது அறிவுமதி (எ) மதியழகன், (அறிவுமதி (எ) மதியழகன் அவர்கள் பாடலாசிரியராகவும், அவிழரும்பு, மண், தை போன்ற இதழ்களின் ஆசிரியராகவும் திறம்படப் பணியாற்றியுள்ளார். என் பிரிய வசந்தமே, நிரந்தர மனிதர்கள், அன்பான இராட்சசி, நட்புக்காலம் உள்ளிட்ட 15 நூல்கள் தமிழ் இலக்கியக் கொடையாக இவரால் தரப்பட்டுள்ளன. ‘வெள்ளைத் தீ‘ என்னும் சிறுகதையையும் எழுதியுள்ளார்.) 

தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது வி.என். சாமி, (வி.என். சாமி அவர்கள் இந்திய விடுதலைப் போரில் வெளிநாட்டுப் பெண்கள், உலகநாடுகளில் தேர்தல் முறைகள், விடுதலைப் போரில் வீரதீரச் செயல்கள், இந்திய விடுதலைப் போரில் புரட்சிப் பெண்கள், புராதன இந்தியாவின் அறிவியல் மேதைகள் உள்ளிட்ட 40 நூல்களை எழுதியுள்ளார். திரு.வி.என். சாமி எழுதிய “புகழ்பெற்ற கடற்போர்கள்” என்னும் நூல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் “இராசராசன் விருது” பெற்றது.)

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் வீ. சேதுராமலிங்கம் (முனைவர் வீ. சேதுராமலிங்கம் அவர்கள் புரட்சித் தலைவி பிள்ளைத்தமிழ், பிள்ளையார் பட்டிப் பிள்ளைத்தமிழ், தெம்மாங்குப் பிள்ளைத்தமிழ், தொம்மாங்குப் பூந்தமிழ், தமிழக நாட்டார் பாடல்கள், திருத்தணி முருகன் பிள்ளைத்தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத்தமிழ் போன்ற பத்துப் பிள்ளைத்தமிழ் நூல்கள் எழுதியவர். “பாரதம் பயிற்றுமணி” என்ற விருதினை பெற்றவர்.) வழங்கிட ஆணையிடப் பெற்றுள்ளன.

மேலும், சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் வளம் சேர்க்கும் தமிழ் அறிஞர்களுக்கும் மற்றும் தமிழ் அமைப்புகளை ஏற்படுத்தி தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம் ஆகியவற்றை போற்றிப் பாதுகாக்கும் வகையில் செயலாற்றி வரும் சிறந்த தமிழ் அமைப்புகளுக்கும் விருதுகள் வழங்கத்தக்க வகையில் விருதுகள் தோற்றுவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து எடப்பாடி கே. பழனிசாமி அவர்களாலும் தமிழறிஞர்களின் பெயரில் புதிய விருதுகள் தோற்றுவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளாக: 2020ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்திற்கும், (வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், 6 அடி உயரமும் 3 1/2 அடி அகலமும் கொண்டதாக மாபெரும் திருக்குறள் நூல் கலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டு, வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் உள்ள தந்தை பெரியார் நூலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவரின் திருவுருவக் காட்சியை உலக மக்களின் விழிகள் காண வெண்டும் என்ற பெருநோக்கத்தை வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் மையமாகக் கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடாகத் தென்னாப்பிரிக்கா, மலேசியா, அமெரிக்கா, ஆசுதிரேலியா, பிரான்சு, இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளில் திருவள்ளுவரின் திருவுருவச் சிலைகளை இவ்வமைப்பு நிறுவியுள்ளது.)

கபிலர் விருது செ. ஏழுமலை, (செ. ஏழுமலை அவர்கள் செ. ஏழுமலை, திருவள்ளூர் மாவட்டம், நாராயணபுரம் கிராமத்தில் 15.07.1956 அன்று பிறந்தவர். பெற்றோர் செல்வராஜ் - ஜெயா ஆவர். இவர் அரசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதை மன்னர் விருது, ஞான ஒளி விருது, தமிழ் இலக்கிய மாமணி விருது உள்ளிட்ட 20 விருதுகள் பெற்றவர்.) உ.வே.சா விருது கி. இராஜநாராயணன், (கி. இராஜநாராயணன் அவர்கள் கரிசல் இலக்கியத்தின் தந்தை’ என்று கருதப்படுபவர். 1958-ஆம் ஆண்டில் சரசுவதி இதழில் இவரது முதல் கதை வெளியானதிலிருந்து தொடர்ந்து எழுதிவருகிறார். “கரிசல் வட்டார வழக்கு அகராதி”, என்னும் அகராதியை உருவாக்கியுள்ளார். இசையிலும், பழந்தமிழ் இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர். நாளிதழ்களிலும் - திங்கள், வார இதழ்களிலும் புறப்பாடு, கண்ணிமை, வால் நட்சத்திரம், ஒரு வாய்மொழிக் கதை, அப்பா பிள்ளை, அம்மா பிள்ளை, மிருக மனிதன், விடுமுறையில் உள்ளிட்ட 81 படைப்புகளைத் தமிழ்த் தாய்க்குப் படைத்தளித்துள்ளார். )

கம்பர் விருது மருத்துவர் எச்.வி. ஹண்டே, (மருத்துவர் எச்.வி. ஹண்டே அவர்கள் தமிழ்க் காப்பியமான கம்பராமாயணத்தை எட்டு ஆண்டுகள் கடினமாக உழைத்து ஆங்கிலத்தில் உரைநடையில் மொழிபெயர்த்துள்ளார்.

இதுவரை கம்பரின் காவியத்தை, இவரைத் தவிர வேறு யாரும் முழுமையாக ஆங்கிலத்தில் உரைநடையில் மொழிபெயர்த்ததாகத் தெரியவில்லை, எனக் கம்பராமாயணத்தில் தோய்ந்த முன்னாள் தலைமை நீதியரசர் மு.மு. இஸ்மாயில் கூறியுள்ளார்.)

சொல்லின் செல்வர் விருது நாகை முகுந்தன், (நாகை முகுந்தன் அவர்கள் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, வில்லிபாரதச் செம்மல், நற்றமிழ் நம்பி, சொற்பொழிவுச் செம்மல், ஸ்ரீ ராம்கதா திலகம் உள்ளிட்ட பதினொரு விருதுகளைப் பெற்றவர். இவர், புலவர் அமரர் கீரன் மாணவர் ஆவார். இவர் இராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம், அபிராமி அந்தாதி, திருப்பாவை உள்ளிட்ட இலக்கியங்களைப் பற்றியும் ஆழ்வார்களைப் பற்றியும் நாயன்மார்களைப் பற்றியும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவற்றை ஆற்றிய பெருமைக்குரியவர்.

 சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, குவைத் ஆகிய அயல்நாடுகளில் இலக்கியம் (ம) சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார்.) 

உமறுப்புலவர் விருது ம. அ. சையத் அசன் (எ) பாரிதாசன்
(ம. அ. சையத் அசன் (எ) பாரிதாசன் அவர்கள் வார, மாத இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். தமிழ்ச் சங்கங்களில், கவியரங்குகளில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இவர் ஆன்மிக நகரம் என்ற நூலினை எழுதியுள்ளார். பைந்தமிழ்ப் பாரதி, கவியருவி, முத்தமிழ்த் தொண்டர் விருது, ம.பொ.சி.விருது, உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். இவர் வசனக் கவிதை, ஓசைக் கவிதை, மரபுக் கவிதை எனப் பல வகையிலான கவிதை நூல்களைப் படைத்தளித்துள்ளார். உமறுப்புலவர் பிறந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரம் சென்று அவர் இல்லத்தையும் நினைவிடத்தையும் மற்றும் அவர் அரசவைக் கவிஞராக இருந்த அரண்மனையையும் நேரில் சென்று தகவல் சேகரித்து ஆவணப்படுத்தியுள்ளார்.)

ஜி.யு.போப் விருது செருமன் நாட்டைச் சேர்ந்த முனைவர் உல்ரீகே நிகோலசு, (முனைவர் திருமதி உல்ரீகே நிகோலசு அவர்கள் முனைவர் உல்ரீகே நிகோலசு அவர்கள் ஜெர்மன் நாட்டில் 24.12.1954 அன்று பிறந்தவர். இவர்தம் பெற்றோர் ஜன் நிகோலஸ், எடித் நிகோலஸ் ஆவார். இவர் 2006 முதல் செர்மன் கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

தமிழ்நாடு அரசின் (2017)இலக்கண விருதினை மதுரை உலகத்தமிழ்ச் சங்கத்தின் வாயிலாகவும், திருவனந்தபுரம் தொல்காப்பியம் விருதினை மொழியியல் நிறுவனத்தின் வாயிலாகவும் பெற்றுள்ளார். அறநெறி நூல்களைப் பிற மொழியில் மொழி பெயர்க்கும் திட்டத்தின் கீழ்ப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் செருமானிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார். தாம் பணியாற்றும் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் அயல்நாட்டு மாணவர்களுக்குத் தமிழ்ப் பெயரைச் சூட்டித் தமிழ் மொழியைப் பெருமைப்படுத்துவதனையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.)  

இளங்கோவடிகள் விருது திரு.மா. வயித்தியலிங்கன்,
(மா.வயித்தியலிங்கன் அவர்கள் அருள் விளக்க மாலை, விண்ணப்பக் கலிவெண்பா, வடிவுடைமாணிக்கமாலை, மூத்த பிள்ளையார் பிரபந்தத் திரட்டும் ஆய்வுரையும், சோழபுரம் செட்டியார் குலமரபு ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தமிழர் பண்பாடு, ஞானத்திறள், ஓம் சக்தி போன்ற நாளிதழ்களில் சிலப்பதிகாரத்தின் மேன்மை பற்றி கட்டுரைகள் எழுதியுள்ளார். பல்வேறு தொலைகாட்சிகளிலும் அயல் நாடுகளிலும் சிலப்பதிகாரத்தின் சிறப்புகளை சொற்பொழிவாற்றியுள்ளார். சிலப்பதிகாரப் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார். சிலம்பிசைக்காக காலமெலாம் உழைத்த குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் வழியில் சிலப்பதிகாரத்திற்கு ஆண்டுதோறும் விழா எடுத்து வருகிறார். இசைக் கலைச்செல்வர், தமிழாகரர், பெரும்பான நம்பி, ஏழிசை வித்தகர், திருப்புகழ் மாமணி, ஞானச் செம்மல், திருக்குறள் தொண்டர் ஆகியப் பட்டங்களைப் பெற்றவர்.)

அம்மா இலக்கிய விருது முனைவர் தி. மகாலட்சுமி,
(முனைவர் தி. மகாலட்சுமி அவர்கள் கோவைத் தமிழ் இலக்கணம், கோவை மாவட்ட வழக்குச்சொல் அகராதி உள்ளிட்ட 97 நூல்களையும், 177 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். திருமூலர் விருது, சுவடிச் சுடர், செந்தமிழ்த் திலகம் விருது உள்ளிட்ட 10 விருதுகளைப் பெற்று அவ்விருதுகளுக்குப் பெருமை சேர்த்தவர்.

1000க்கும் மேற்பட்ட பயிலரங்குகளிலும் கருத்தரங்குகளிலும் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இலண்டன், மலேசியா உள்ளிட்ட அயல்நாடுகளில் திருமந்திரமும் வாழ்வியலும் என்னும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார். ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளார். இவர் 30 முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு நெறியாளராக இருந்த தகுதியினைப் பெற்றவராவார். )

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது ஆ. அழகேசன், (ஆ.
அழகேசன் அவர்கள் எழுத்துச் செல்வர் விருது, சிறந்த மாமனிதர் விருது, கலைமணி விருது, மனிதநேய முரசு உள்ளிட்ட 27 விருதுகளைப் பெற்றுவர். வாழ்ந்து காட்டுவோம் வா, மானுடம் வளர்ப்போம் சாதியும் ஒழிப்போம், திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கும் 133 சிறுகதைகள் உள்ளிட்ட 10 நூல்களைப் படைத்துள்ளார். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் எண்ணங்களையும் கருத்துகளையும் இவரது நூல்கள் எடுத்துரைப்பதோடு சமூகநலனுக்காகப் போராடும் குணத்துடனும் பாடுபட்டு வருகிறார். )

மறைமலையடிகளார் விருது மறை. தி. தாயுமானவன்,
(மறை. தி. தாயுமானவன் அவர்கள் மறைமலையடிகள் நாட்குறிப்புகள், தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளார், மறைமலையடிகளாரின் பன்முகப் பார்வை, மறைமலையடிகளாரின் அடிச்சுவட்டில் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்பவர். இவர் மறைமலையடிகளார் தமிழ்மொழிக்கு ஆற்றியப் பணிகள் குறித்து தமிழ்நாட்டிலும் அயல்நாடுகளிலும் சொற்பொழிவாற்றியுள்ளார். மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை நிறுவி சமூகத் தொண்டாற்றி வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் அமைந்துள்ள மறைமலையடிகளார் வாழ்ந்த இல்லத்தில் அவரின் மார்பளவு திருவுருவச் சிலையை அறக்கட்டளையின் மூலமாக நிறுவியுள்ளார். செந்தமிழ் முரசு, தனித்தமிழ் குரிசில் போன்ற பட்டங்களைப் பெற்றவர்.)

அயோத்திதாசப் பண்டிதர் விருது முனைவர் கோ.ப. செல்லம்மாள், (முனைவர் கோ.ப. செல்லம்மாள் அவர்கள் திருக்குறள் இசைக் கதம்பம், திருக்குறளில் பெண்ணியச் சிந்தனைகள், திருக்குறள் இசைவானில் உள்ளிட்ட 23 நூல்களையும், திருக்குறளுக்கு உரையும் எழுதியுள்ளார். திருக்குறள் ஓசையில் நடன நாட்டியத்தை அரங்கேற்றியுள்ளார், தமிழிசை பயிற்சி வகுப்புகளையும் நடத்திவருகிறார். தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் 3000 க்கும் மேற்பட்ட தமிழிலக்கியக் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். உலகப் பொதுமறை திருக்குறள் வழி நடப்பதோடு திருவள்ளுவர் சிலையைத் தம் இல்லத்தில் நிறுவித் திருக்குறள் சேவையாற்றி வருகிறார். திருக்குறள் இசைக் கதம்பம், திருக்குறளில் பெண்ணியச் சிந்தனைகள், திருக்குறள் இசைவானில் உள்ளிட்ட 23 நூல்களையும் , திருக்குறளுக்கு உரையும் எழுதியுள்ளார். திருக்குறள் ஓசையில் நடன நாட்டியத்தை அரங்கேற்றியுள்ளார், தமிழிசை பயிற்சி வகுப்புகளையும் நடத்திவருகிறார். தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் 3000 க்கும் மேற்பட்ட தமிழிலக்கியக் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். உலகப் பொதுமறை திருக்குறள் வழி நடப்பதோடு திருவள்ளுவர் சிலையைத் தம் இல்லத்தில் நிறுவித் திருக்குறள் சேவையாற்றி வருகிறார்.)

அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது முனைவர் ஊரன் அடிகள், (முனைவர் ஊரன் அடிகள் அவர்கள் வடலூர் வரலாறு, இராமலிங்கரும் தமிழும், வள்ளலார் இராமலிங்க அடிகள் வரலாறு, புரட்சித் துறவி வள்ளலார் உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார். இவர் கௌரவ டாக்டர் பட்டம், டாக்டர் ஆஃப் சயின்ஸ் ஆகிய பட்டங்களைப் பெற்றவர். வடலூரில் திங்கள்தோறும் பூசநாள் தரிசன விழாவில் 60 ஆண்டுகளாகச் சன்மார்க்கச் சொற்பொழிவு ஆற்றிவருகிறார். வெளிநாடுகள் பலவற்றுக்குச் சென்று தமிழ்ச் சைவ சமரச சன்மார்க்கத் தொடர் வகுப்புகள் நடத்தி வருகிறார். 22 ஆம் வயதில் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் நிறுவி இன்றளவும் 64 ஆண்டுகளாகத் தமிழ்ப்பணி, சைவப்பணி மற்றும் சன்மார்க்கப் பணிகளை ஆற்றிவருகிறார்)

காரைக்கால் அம்மையார் விருது முனைவர் மோ. ஞானப்பூங்கோதை, (முனைவர் மோ. ஞானப்பூங்கோதை அவர்கள் சைவ சித்தாந்தத் திறன், சைவ சித்தாந்தத்தில் ஞானநெறி உள்ளிட்ட 4 நூல்களையும், 30க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். இவர், சித்தாந்த வித்யாநிதி, சித்தாந்த ஞானதேசிகர் உள்ளிட்ட 5 விருதுகளைப் பெற்றவர்.) தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் நாளிதழ் விருது தினமணி நாளிதழுக்கும் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் வார இதழ் விருது கல்கி வார இதழுக்கும் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது செந்தமிழ் திங்களிதழுக்கும், தேவநேயப்பாவாணர் விருது முனைவர் கு. சிவமணி, வீரமாமுனிவர் விருது ஹாங்காங்கைச் சேர்ந்த முனைவர் கிரிகோரிஜேம்சு, சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருது சோ. சேசாச்சலம், முனைவர் இராம. குருநாதன், ப. குணசேகர், முனைவர் பத்மாவதி விவேகானந்தன், சு. ஜோதிர்லதா கிரிஜா, ஜெ. இராம்கி (எ) இராமகிருட்டினன், சுவாமி விமூர்த்தானந்தர், மீரா ரவிசங்கர், திலகவதி, கிருட்டின பிரசாத் ஆகிய பத்து பேருக்கும் மற்றும் 2019ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது சே. இராஜாராமன் மதுரை, உலகத் தமிழ்ச் சங்க விருதுகளாக: 2020ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த முனைவர் அலெக்சிசு தேவராசு சேன்மார்க், இலக்கண விருது இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் அருணாசலம் சண்முகதாசு மொழியியல் விருது சிங்கப்பூரைச் சேர்ந்த முனைவர் சுப. திண்ணப்பன் வழங்கிட ஆணையிடப் பெற்றுள்ளன.

2020 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருவர் என்ற வகையில் சென்னை மாவட்டத்திற்கு ஜெ.வா. கருப்புசாமி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு வேணு புருஷோத்தமன் அவர்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு முனைவர் சு. சதாசிவம், வேலூர் மாவட்டத்திற்கு மருத்துவர் சே. அக்பர் கவுஸர், கிருட்டினகிரி மாவட்டத்திற்கு மா. முருககுமரன், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முனைவர் இரா. வெங்கடேசன், விழுப்புரம் மாவட்டத்திற்கு பரிக்கல் ந. சந்திரன், கடலூர் மாவட்டத்திற்கு முனைவர் ஜா. இராஜா, பெரம்பலூர் மாவட்டத்திற்கு முனைவர் அ. செந்தில்குமார் (எ) தமிழ்க்குமரன், அரியலூர் மாவட்டத்திற்கு முனைவர் சா. சிற்றரசு, சேலம் மாவட்டத்திற்கு கவிஞர் பொன்.சந்திரன், தருமபுரி மாவட்டத்திற்கு பாவலர் பெரு.முல்லையரசு, நாமக்கல் மாவட்டத்திற்கு ப. முத்துசாமி, ஈரோடு மாவட்டத்திற்கு முனைவர் கா. செங்கோட்டையன் அவர்களுக்கும், கரூர் மாவட்டத்திற்கு சி. கார்த்திகா, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு எம்.ஜி. அன்வர் பாட்சா, திருப்பூர் மாவட்டத்திற்கு முனைவர் துரை அங்குசாமி, நீலகிரி மாவட்டத்திற்கு ம. பிரபு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு சோமவீரப்பன், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஜீவி (ஜீ. வெங்கட்ராமன்), சிவகங்கை மாவட்டத்திற்கு இரா. சேதுராமன், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பழ. மாறவர்மன், திருவாரூர் மாவட்டத்திற்கு இராம. வேல்முருகன், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மா. கோபால்சாமி, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆ. முனியராஜ், மதுரை மாவட்டத்திற்கு முனைவர் போ. சத்தியமூர்த்தி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு தா. தியாகராசன், தேனி மாவட்டத்திற்கு த. கருணைச்சாமி, விருதுநகர் மாவட்டத்திற்கு கவிஞர் சுரா (எ) சு. இராமச்சந்திரன், திருநெல்வேலி மாவட்டத்திற்கு வீ. செந்தில் நாயகம், தூத்துக்குடி மாவட்டத்திற்கு ச. காமராசு (முத்தாலங்குறிச்சி காமராசு), கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பா. இலாசர் (முளங்குழி பா. இலாசர்), திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முனைவர் ச. சரவணன், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நந்திவரம் பா. சம்பத் குமார், இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கவிஞர் பனப்பாக்கம் கே. சுகுமார், தென்காசி மாவட்டத்திற்கு மு. நாராயணன், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு சி. உதியன், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு துரை குணசேகரன் வழங்க ஆணையிடப் பெற்றுள்ளன.

இவ்விருதுகள் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் அவர்களால் வழங்கப்பட உள்ளன. விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகையாக 1 இலட்சம் ரூபாயும் தமிழ்த்தாய் விருது பெறும் தமிழ் அமைப்பிற்கு 5 இலட்சம் ரூபாயும், தமிழ்ச் செம்மல் விருது பெறும் விருதாளர் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 25 ஆயிரமும் வழங்கப்படும். மேலும், இவர்களுக்கு விருதுக்கான தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com