ஜன. 27க்குப் பின்னும் அதிமுக ஆட்சிதான்: ஸ்டாலினுக்கு பழனிசாமி பதில்

ஜனவரி 27 ஆம் தேதிக்குப் பின்னரும் தமிழகத்தில் அதிமுக ஆட்சியே இருக்கும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 
காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஜனவரி 27 ஆம் தேதிக்குப் பின்னரும் தமிழகத்தில் அதிமுக ஆட்சியே இருக்கும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாவட்டந்தோறும் தமிழக முதல்வர் எட்பபாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வாலாஜாபாத்தில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியதாவது: 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவை உடைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்கிறார்.  ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என எத்தனையோ சதி திட்டங்களைத் தீட்டி முயற்சித்தார். ஆனால், மக்களின் ஆதரவோடும் தொண்டர்களின் ஆதரவோடும் அனைத்தும் சதித் திட்டங்களும் முறியடிக்கப்பட்டது. தற்போது கூட வருகின்ற 27 ஆம் தேதிக்குப் பிறகு எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சர் ஆக இருப்பாரா என்று கூறி வரும் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே இந்த ஆட்சி ஒரு மாதத்தில் கவிழும், ஆறு மாதத்தில் கவிழும், ஒரு வருடத்தில் கவிழும் எனக் கூறி வந்தார். ஆனால், நான்கு ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. வருகின்ற  சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலும் அதிமுக தான் வெற்றி பெறும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் கனவில் உள்ளார். அவர் காணுகின்ற கனவு ஒருபோதும் நிறைவேறாது. மீண்டும் அதிமுக ஆட்சிதான் தமிழகத்தில் மலரும். இந்த தேர்தல் மட்டுமல்லாது வருகிற தேர்தல்களிலும் அதிமுக தான் தொடர்ந்து ஆட்சி அமைக்கும். நான் எப்பொழுதும் விவசாயி விவசாயி என்று சொல்லுகிறேன் என மு.க.ஸ்டாலின் சொல்லி வருகிறார். விவசாயி, விவசாயி என்று தான் சொல்ல முடியும். வியாபாரி, தான் வியாபாரி என்று தான் சொல்ல முடியும், அதேபோல விவசாயி, தான் விவசாயி என்று தான் சொல்ல முடியும்.

மக்களால் தேர்தெடுகக்கப்பட்ட முதல்வர் அல்ல பழனிசாமி என்கிறார். மக்கள் முதல்வரை நேரடியாக தேர்தெடுக்க முடியாது என்பதை மு.க.ஸ்டாலின் தெரிந்துக்கொள்ள வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மின்தடை தான் ஏற்படும். கடந்த திமுக ஆட்சியில் பல மணிநேரங்கள் இருந்த மின்தடை அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் தற்போது மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தற்போது தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகவே மின்சாம் உற்பத்தி செய்யப்படுகிறது. குடிமராமத்து திட்டப் பணிகளால் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் சேமித்து வைத்துள்ள அரசு அதிமுக அரசு. மாநில அரசுகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு இந்தியாவிற்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இதனால் பல துறைகளில் தமிழக அரசுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 

உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 49 சதவிகிதம். கரோனா வைரஸ் தொற்றை மிகச்சரியாக கையாண்டு வருகிறது தமிழக அரசு. இதனால் தான் மாநில முதல்வர்களின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் இந்தியாவிற்கு  முன்னோடியாக விளங்குகிறது என்றார். நாட்டை பற்றியே தெரியாத தலைவர் தான் மு.க.ஸ்டாலின். துறை தொடர்பாக பேச முக.ஸ்டாலின் தயாரா, துண்டு சீட்டு இல்லாமல் ஸ்டாலின் வருவரா என்று கேள்வி எழுப்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் தொடர்ந்து நல்லாட்சி அமைய இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com