என்ன தமிழகத்தில் கங்கை நதியா? திமுக எம்.பி.யின் நக்கல் டிவீட்

கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தின் கீழ் நிதி செலவிடப்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய அரசு சார்பாக பதிலளிக்கப்பட்டுள்ளது.
என்ன தமிழகத்தில் கங்கை நதியா? திமுக எம்.பி.யின் நக்கல் டிவீட்
என்ன தமிழகத்தில் கங்கை நதியா? திமுக எம்.பி.யின் நக்கல் டிவீட்

சென்னை: தமிழகத்தில் உள்ள பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தின் கீழ் நிதி செலவிடப்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய அரசு சார்பாக பதிலளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து பெறப்பட்ட பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி (சிஎஸ்ஆர்) எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் எழுப்பிய கேள்விக்கு, கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்துக்காக, கடந்த மூன்று ஆண்டுகளில் சமூக பொறுப்பு நிதியிலிருந்து சுமார் 52 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக மாநிலங்களவையில் மத்திய பெரு நிறுவனங்களுக்கான விவகாரத் துறை அமைச்சகம் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிலை திமுக எம்.பி. வில்சன் தனது சுட்டுரைப் பக்கத்தில் விமரிசித்துள்ளார்.

அதில், தமிழகத்திலிருந்து பெறப்பட்ட சமூக பொறுப்பு நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்ற எனது கேள்விக்கு, தமிழகத்தின் நிதி, கங்கையை சுத்தப்படுத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் கங்கை நதி பாய்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை என்று நக்கலாக பதிவு  செய்துள்ளார்.

மேலும், தமிழகத்திலிருந்து 2019 - 2020ல் பெறப்பட்ட ரூ.915 கோடி எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பெரு நிறுவனங்கள் தங்கள் லாபத்தின் ஒரு சிறு பகுதியை சமூக நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக செலவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இந்த நிதியை பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி என்று கூறுகிறார்கள்.

இதுவரை, பெரு நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்பு நிதியை, தங்கள் நிறுவனம் அமைந்திருக்கும் பகுதியில் சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணிகளுக்காக செலவிட்டு வந்தன.

ஆனால் கரோனா பேரிடர் காலத்தில், பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியை பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில், தற்போது, தமிழகத்திலிருந்து பெறப்பட்ட சமூக பொறுப்பு நிதி, கங்கை நதியை தூய்மைப்படுத்த செலவிடப்பட்டிருப்பதாக மத்திய இணையமைச்சர் மாநிலங்களவில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com