தமிழகத்தில் 209 குடும்பங்களைச் சேர்ந்த 450 பேருக்கு கரோனா: அச்சம் தரும் தகவல்
தமிழகத்தில் 209 குடும்பங்களைச் சேர்ந்த 450 பேருக்கு கரோனா: அச்சம் தரும் தகவல்

தமிழகத்தில் 209 குடும்பங்களைச் சேர்ந்த 450 பேருக்கு கரோனா: அச்சம் தரும் தகவல்

ஒரு குடும்பத்தில் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவது புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை: தமிழகத்தில் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவே தெரிகிறது. ஆனால், ஒரு குடும்பத்தில் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவது புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, கடந்த 15 நாள்களில் மட்டும் 209 குடும்பங்களைச் சேர்ந்த 450 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் இது பற்றி பேசுகையில், சென்னையில் 33 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு குடும்பத்தில் குறைந்தது இரண்டு பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

அதில் திருவொற்றியூர் மற்றும் மாதவரத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த தலா 6 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. தண்டையார்பேட்டையில் ஒரே குடும்பத்தில் 9 பேருக்கும், ராயபுரத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 16 பேருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது.

அயனாவரம், அம்பத்தூர், அண்ணாநகர், வளசரவாக்கம், தேனாம்பேட்டை, ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோளிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் ஒரே குடும்பத்தில் பலருக்கு கரோனா உறுதி செய்யப்படுவது அதிகமாக இருப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் சமீபத்தில் திருமணம், இறுதிச் சடங்கு போன்ற விழாக்களில் பங்கேற்றவர்களாகவும் இருப்பதாக ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

குடும்பம் குடும்பமாக கரோனா பாதிப்புக்குள்ளாவது சென்னைக்கு மட்டுமான சவாலாக இல்லை, இது அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, காங்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் பரவி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இதே நிலைதான் கோவை மாவட்டம் பீளமேடு, காந்திநகர் பகுதிகளிலும் காணப்படுகிறது.  

இந்த நிலையைத் தவிர்க்க மக்கள் பொதுவிடங்கள், நிகழ்ச்சிகளில் கூடும் போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும், முகக்கவசம் அணிவதும் அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com