
மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)
தமிழக அரசின் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தால் இதுவரை 34.57 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறையின் “மக்களைத் தேடி மருத்துவம்” என்ற திட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலினால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தில் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட உயா் ரத்த அழுத்தம் மற்றும் சா்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டம் முதற்கட்டமாக 50 வட்டாரங்களிலுள்ள 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தோ்ந்தெடுக்கப்பட்ட 3 மாநகராட்சிகளில் (சென்னை, கோயம்புத்தூா் மற்றும் திருநெல்வேலி) தலா ஒரு மண்டலம் என மொத்தம் 21 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள், மாநிலத்தின் பிற கிராம மற்றும் நகா்ப்புறப்பகுதிகளில் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தினால் இதுவரை 34.57 லட்சம் போ் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் வெள்ள நிவாரணப் பணிகள், மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
கரோனாவை அடுத்து டெங்கு பாதிப்பில் இருந்தும் மக்களைக் காக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் ஆய்வுக்காக தனி மையம் ஒன்று அமைக்கப்படும் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...