
பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து 5,558 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
திருவள்ளூர்: பூண்டி ஏரிக்கான நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை மற்றும் அம்மம்பள்ளி அணை நீர் என வரத்து அதிகரித்துள்ளதால் புதன்கிழமை 5 ஆயிரம் கன அடியிலிருந்து உபரி நீர் திறப்பு 5,558 கன அடியாக கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் அருகே பூண்டி நீர்த்தேக்கத்திற்கான நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை, ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஏரியில் நீர்மட்டம் அதிகரித்தும் வருகிறது.
இதையும் படிக்க | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பொதுத்துறை வங்கிகளில் 1828 அதிகாரி வேலைவாய்ப்பு அறிவிப்பு
இந்த நிலையில் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திற்கு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 4095 கன அடியாக நீர் வரத்து இருந்தது. இந்த நிலையில் புதன்கிழமை 4996 கன அடியாக வரத்து அதிகரித்தது. இந்த ஏரி 35 அடி உயரமும், 3231 கொள்ளளவு கொண்டதாகும். தற்போது ஏரி 33.28 உயரமும், 2603 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
இதையும் படிக்க | வேலை வேண்டுமா...? இஸ்ரோவில் மொழிப்பெயர்பாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
அதனால் நீர் வரத்து உயரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் 5,558 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனால், கொசஸ்தலை ஆறு கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாயமும் ஏற்கெனவே விடுத்துள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...