தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: மு.க.ஸ்டாலின் உரை

திருப்பூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் நீட்ஸ் திட்டத்தில் 23 பேருக்கு தொழில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உரையாற்றும் மு.க.ஸ்டாலின்
உரையாற்றும் மு.க.ஸ்டாலின்

திருப்பூர்: தமிழர்களின் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய வகையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் முடிவுற்ற திட்டப்பணிகள் தொடக்க விழா, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் 4,335 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் வரவேற்புரையாற்றினார்.

இந்த விழாவுக்குத் தலைமை வகித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கோவையில் காலையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றதுடன், தற்போது திருப்பூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசு விழாவில் பங்கேற்று உரையாற்றுவதில் நான் பெருமைப்படுகிறேன். திருப்பூருக்கு எத்தனையோ சிறப்புக்கள், பெருமைகள் உள்ளது. ஆனாலும் நம்மை ஆளாக்கிய அறிஞர் அண்ணா, அவரை ஆளாக்கிய தந்தை பெரியார் ஆகிய இந்த இரு பெரும் தலைவர்களும் முதன்முதலில் சந்தித்தபகுதி இந்த திருப்பூர் பகுதிதான்.

அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக சாதாரணமாக அல்ல. பூரிப்புடன், முகமலர்ச்சியுடன் எப்படி நீங்கள் வந்துள்ளீர்களோ அதே போல் நானும் வந்துள்ளேன். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதை நேரடியாக இன்று திருப்பூரில் உங்கள் மூலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இதில், 4,335 பயனாளிகளுக்கு ரூ.55.65 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக 4,335 குடும்பங்கள் பயனடைகின்றனர் என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த விழாவை குறுகிய காலத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்த அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோரைப் பாராட்டுகிறேன்.

திமுக ஆட்சி அமைந்தபோது ஒரு கட்சியின் அரசாக இது இருக்காது என்றும், இனத்தின் அரசாக இருக்கும் என்பதை நான் அப்பொழுதே தெரிவித்தேன். அதே போல், இந்த மேடையில் தமிழ் சமுதாயத்தின் பல்வேறு தரப்பினருக்கும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழர்களின் வாழ்க்கைய மேம்படுத்தக்கூடிய அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின்கீழ் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் பயனாளிகளுக்கு வங்கிக்கடன் வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

அதாவது 660 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.22 கோடி அளவில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதல்வராக இருந்தபோதும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஏராளமான நிதியுதவிகள் வழங்கியதை நினைத்துப் பார்க்கிறேன்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதியுதவி வழங்கும்போது எத்தனை பயனாளிகளோ அனைவருக்கும் கொடுத்து முடித்துவிட்டுத்தான் மேடையில் இருந்துகீழே இறங்குவேன். நான் இதைபெருமைக்காகச் சொல்லவில்லை. ஏனெனில் அந்த நிதியுதவி முழுமையாக பயனாளிகளை சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கொள்கையை மனதில் பதியவைத்துள்ளேன்.

திமுக ஆட்சியில் என்பது உள்ளாட்சியில் நல்லாட்சி நடத்திய ஆட்சி என்று அன்று பெயர் பெற்றோம். ஆனால் கடந்த காலங்களில் ஆட்சி எப்படி போனது என்பது உங்களுக்குத் தெரியும். திமுக ஏற்கெனவே ஆட்சியில் இருந்தபோது நமக்கு நாமோ திட்டம், தந்தை பெரியார் பெயரில் சமத்துவபுரங்கள், கான்கிரீட் வீடுகள், கான்கிரீட் சாலைகள், கலைஞர் காப்பீட்டுத்திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை, மகப்பேறு நிதியுதவி, கலப்புத்திருமண நிதியுதவி திட்டம், ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித்திட்டம், திருநங்கைகள் நலவாரியம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தியுள்ளோம்.

இந்த வரிசையில் கொண்டுவரப்பட்ட சிறப்பான திட்டம்தான் மகளிர் சுய உதவிக்குழுத்திட்டம் 1989 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது முதன்முதலாக தர்மபுரியில் தொடங்கிவைக்கப்பட்டது. பெண்கள் யாருடைய தயவும் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

ஆனால், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் சின்னபின்னமாக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் அதை மீண்டும் முழுமையாக புதுப்பிக்கத்திட்டமிட்டு தற்போது 660 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.22 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 5,470 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.230 கோடி வழங்கப்பட்டுள்ளது. முதல்வராகப் பொறுப்பேற்றுடன் நான் வெளியிட்டுள்ள 5 அறிவிப்புகளில் 2 ஆவது அறிவிப்பு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழகத்தில் கரோனா கால கட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் ரூ.179.19 கோடி முதலீட்டுமானியமாக வழங்கப்பட்டுள்ளது. சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மூலமாகத்தான் ஏழை, எளிய மக்கள் உயர்வடையமுடியும்.

சென்னை, கோவையைத் தொடர்ந்து திருப்பூர் மாநகரின் வளர்ச்சியையும் மனதில் திருப்பூர் நகரக்குழுமம்அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து 6மாதங்களில் செய்த சாதனைகளை பத்திரிகைகள் பாராட்டி வருகிறது. அண்டை மாநிலங்களாக ஆந்திரம், கேரளத்தைச் சார்ந்த ஊடகங்களும் பாராட்டிவருகிறது. இவற்றை எல்லாம் ஸ்டாலின் என்ற தமிிப்பட்ட மனிதருக்கான பாராட்டாக நான் நினைக்கவில்லை. உங்களுக்கு கிடைத்த பாராட்டாகவே நினைக்கிறேன்.

பல்வேறு மாநில முதல்வர்களின் பட்டியலை வெளியிட்டதில் நம்பர் 1 தமிழக முதல்வர் என்று சொல்வது பெருமைதான், மகிழ்ச்சிதான். ஆனால் நம்பர் 1 முதல்வர் என்று சொல்வதை விட நம்பர் 1 தமிழகம் என்று சொல்லக்கூடிய நிலையை நாம் உருவாக்க வேண்டும். ஆகவே, வாக்காளித்த மக்களுக்கு மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் பணியாற்றி வருகிறோம். ஆகவே, மீதமுள்ள நான்கரை ஆண்டுகளில் பல்வேறு சிறப்பான பணிகளை செய்ய முடியும் என்ற முடியும் என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஏ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ்,முன்னாள் அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, மக்களவை உறுப்பினர்கள் கே.சுப்பராயன், கணேசமூர்த்தி, கு.சண்முகசுந்தரம், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ், திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இல.பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com