தக்காளி வாங்கும்போது கண்ணீர் வந்ததா? காரணம் இவர்களில்லை

தக்காளி வாங்கும் போது அதன் விலை உயர்வுக்கு, விவசாயிகளை குற்றம்சாட்டிய ஆயிரக்கணக்கானவர்களுக்கு மத்தியில் நீங்களும் ஒருவர் என்றால்.. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
தக்காளி வாங்குவதற்கே அழுகிறோமே.. அப்போ இவர்கள் நிலைமை?
தக்காளி வாங்குவதற்கே அழுகிறோமே.. அப்போ இவர்கள் நிலைமை?


பெட்ரோல், டீசல் விலைகளுக்கு எல்லாம் கடும் போட்டியாக தக்காளி விலை ரூ.140 வரை சென்றது. தக்காளி வாங்கும் போது அதன் விலை உயர்வுக்கு, விவசாயிகளை குற்றம்சாட்டிய ஆயிரக்கணக்கானவர்களுக்கு மத்தியில் நீங்களும் ஒருவர் என்றால்.. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

தக்காளி வாங்கியதால் உங்கள் பாக்கெட் மட்டுமல்ல.. தக்காளியை உற்பத்தி விவசாயிகளின் பாக்கெட்டும் காலியாகத்தான் உள்ளது.

தக்காளி விலை விண்ணைத் தொட்ட போது அதனால் ஏற்பட்ட லாபம் எதுவும் விவசாயிகளைச் சென்றடையவில்லை. விலை உயர்வு எனும் பயணம் சந்தையிலேயே உருவாக்கப்பட்டு, சந்தையிலேயே முடிந்தும் போனது.

இது குறித்து தேக்கமலையைச் சேர்ந்த தக்காளி விவசாயி கூறுகையில், ஏக்கர் கணக்கில் எப்போதும் தக்காளியை விளைவிப்பேன். ஆனால், இம்முறை, மழை காரணமாக சிறு பகுதியில்தான் தக்காளியை பயிர் செய்தேன். வழக்கமாக, ஒரு கிலோ தக்காளியை 15 முதல் 20 ரூபாய் அளவுக்கு கொள்முதல் செய்வார்கள். தேவை அதிகரிக்கும் போது மட்டும் ரூ.30 அளவுக்கு கொள்முதல் செய்யப்படும். ஆனால், முதல் முறையாக, கொள்முதல் விலை திடீரென ரூ.70 என்ற அளவுக்கு உயர்ந்தது. அதுதான், சந்தைகளில் ரூ.120க்கும் அதிக விலைக்கு விற்பனையானது.

கோவில்பட்டியைச் சேர்ந்த மற்றொரு விவசாயி கூறுகையில், தக்காளி மண்டிகளும், வணிகர்களும்தான், இந்த விலை உயர்வால் பெரும் லாபம் அடைந்தனர். ஓரளவுக்கு கொள்முதல் விலை உயர்ந்தது என்னவோ உண்மைதான். ஆனால், தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, தக்காளி விளைவித்த நிலப்பகுதிகளில் பெரும்பாலான செடிகள் அழுகிவிட்டன. விளைவித்ததில் பாதி தக்காளிதான் கொள்முதல் செய்யப்பட்டது. எனவே, கொள்முதல் விலை உயர்வு, அழுகிய தக்காளிக்கு ஈடாகத்தான் இருந்ததே தவிர, லாபம் என்று எதுவும் கிடைக்கவில்லை.  ஆனால் விலை உயர்வு காரணமாக வணிகர்களும், தரகர்களும்தான் நல்ல லாபம் சம்பாதித்தனர். ஏனெனில் அவர்களுக்கு எந்த இழப்புமே இல்லையே என்கிறார்.

வர்த்தக நுட்பத்தை நாம் புரிந்து கொண்டால், விவசாயிகளுக்கு ஏன் எந்த லாபமும் கிடைப்பதில்லை என்பதை  அறிய முடியும். 

அதாவது, விவசாயிகளிடமிருந்து தக்காளிகள் கமிஷன் மண்டி எனப்படும் கிடங்குகளுக்குச் செல்கின்றன. அங்கிருந்து வணிகர்களிடம். தினசரி தேவையைப் பொருத்து, கமிஷன் மண்டிகள்தான், நாள்தோறும் தக்காளி கொள்முதல் விலையை நிர்ணயிக்கின்றன. மண்டிகளிலிருந்து, வணிகர்கள் தக்காளியை வாங்கி அதனை மொத்த விற்பனை கடைகளுக்கு விற்பனை செய்வார்கள். இங்குதான், விவசாயிகளிடமிருந்து வாங்கும் தக்காளியின் விலை இரண்டு மடங்காகவோ, மூன்று மடங்காகவோ உயருகிறது.

ஏன், விவசாயிகளே நேரடியாக பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என்று கேட்கிறீர்களா? 

அதற்கு விவசாயிகளின் பதில் இதோ.. நாள் முழுக்க கடைகளில் உட்கார்ந்து கொண்டு விவசாயிகளே அனைத்துப் பொருள்களையும் விற்பனை செய்ய முடியாது. வணிகர்கள் செய்வது போல. விவசாயத்தை மேற்கொள்ள நாள்தோறும் பல்வேறு பணிகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டும் என்கிறார்.

எப்போது தக்காளி விலை ரூ.130 விற்பனை செய்யப்பட்டதோ, அன்று, எங்களிடம் ரூ.67க்கு பேரம் பேசி தக்காளி கொள்முதல் செய்யப்பட்டது என்கிறார் வருத்தத்துடன்.

கனமழை காரணமாக, ஏராளமான தக்காளிகள் விளைநிலத்திலேயே அழுகிவிட்டன. பொதுவாகவே மழைக்காலத்தில் தக்காளி விவசாயத்துக்கு சிறப்பு கவனம் செலுத்துவோம். எனவே, இம்முறை, செலவும் அதிகமாகி, தக்காளி அழுகியதால், நஷ்டம்தான் அதிகம். 100 பெட்டிகளில் தக்காளி பறிக்க வேண்டிய இடத்திலிருந்து, இந்த முறை வெறும் 10 முதல் 20 பெட்டிகள்தான் தக்காளி கிடைத்தது. 

எனவே, தக்காளி விவசாயிகள், தமிழக அரசை வலியுறுத்துவது இதுதான், தக்காளி கொள்முதல் செய்ய நிரந்தரமான ஒரு விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பதுதான். இதனால், அதிக தக்காளி உற்பத்தி செய்யப்பட்டாலும், நஷ்டத்துக்கு விற்கும் நிலை ஏற்படாது என்கிறார்கள்.

தக்காளி அதிகளவில் உற்பத்திசெய்யப்பட்டு, தேவை குறையும்போது, ஒரு கிலோ தக்காளி ஒரு சில ரூபாய்களுக்கு கொள்முதல் செய்யப்படுவதால் மனவேதனை அடைந்து, அதனை விவசாயிகள் சாலைகளில் கொட்டிச் செல்லும் செய்திகளையும் நாம் பார்த்திருப்போம். 120  ரூபாய்க்கு தக்காளியை வாங்கும் போது, அதில் ஒன்று அழுகிவிட்டால் நாம் எப்படி துடிக்கிறோம்.. பணம் செலவிட்டு, உழைப்பைக் கொட்டி விளைவித்த தக்காளியை நஷ்டத்துக்கு விற்பதைவிட என்று மனவிரக்தியில் சாலைகளில் கொட்டிச் செல்லும் விவசாயியின் மனநிலையை இப்போது நிச்சயம் நம்மால் உணர முடியும்தானே..?

தக்காளி விலை உச்சம் தொட்ட போது, தமிழக  அரசு இதில் கவனம் செலுத்தத் தொடங்கியதுமே, தக்காளி விலை சில்லறை விற்பனை கடைகளில் 90 மற்றும் 60 - 70 ஆகக் குறைந்தது. இது எப்படி சாத்தியமானது என்று சிந்தித்தாலே இதிலிருக்கும் நுட்பங்கள் புரிந்துவிடும்.

இனி விலை உயரும் போது விவசாயிகளை குற்றம்சொல்லாதீர்கள்.. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com