கல்விக் கடனை ரத்து செய்வது குறித்து ஆய்வு: அமைச்சர் பிடிஆர். பழனிவேல்

தமிழகத்தில் மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்வது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன்
Published on
Updated on
2 min read

மதுரை: தமிழகத்தில் மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்வது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக கல்விக் கடன் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் தலைமை வகித்தார். இதைத்தொடர்ந்து கல்விக்கடன் சிறப்பு முகாமை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்து மாணவ, மாணவியருக்கு வங்கிக்கடன் உத்தரவுகளை வழங்கினர். 

நிகழ்ச்சியில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியது:  மாணவ, மாணவியர் இளநிலை பட்டப்படிப்பு பயில்வதற்கு கல்விக்கடன் பெற்றால் அவர்கள் முதுநிலை பட்டப்படிப்பு பயில்வதற்கு கல்விக்கடன் பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே வங்கிகள் கல்விக்கடன் வழங்குவதில் ஒரு சில தளர்வுகளை அளிக்க வேண்டும் என்றார்.  

அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்:  கடந்த காலங்களில் வங்கிகளில் கல்விக்கடன் பெற்றவர்கள் படிப்பு முடிந்த நிலையில் வேலை கிடைக்காமல் உள்ளதால் கல்விக்கடனை திரும்பச் செலுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே இதை கருத்தில்கொண்டு கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கடன் ரத்து செய்வது குறித்து தமிழக முதல்வரின் பரிந்துரையின் பேரில் ஆய்வு நடைபெற்று வருகிறது என்றார்.

மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோ.தளபதி, ஏ.வெங்கடேசன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சூரியகலா, அமெரிக்கன் கல்லூரி முதல்வர் எம்.தவமணி கிறிஸ்டோபர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். கல்விக்கடன் சிறப்பு முகாமில் 25}க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வங்கிகள் பங்கேற்றன. இந்த முகாமில் 211 பேருக்கு ரூ.11.81 கோடிக்கான கல்விக்கடன் ஒதுக்கீடு ஆணைகளை வங்கிகள் வழங்கின. 

இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு: மதுரை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் "இல்லம் தேடி கல்வித் திட்டம்' விழிப்புணர்வு கலை பயண பிரசார வாகனத்தை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது:

கரோனா தொற்றால் ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக இல்லம் தேடி கல்வித் திட்டம் என்ற புதிய திட்டத்தை உருவாக்கி இதற்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியரின் விவரங்கள் மட்டுன்றி பிறப்புச்சான்று அடிப்படையிலும் தகவல்களை திரட்டி  மாணவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு கல்வி போதிப்பதுதான் திட்டத்தின் நோக்கம். இதனடிப்படையில் 30 லட்சம் மாணவர்கள் இருப்பதாக தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.  இந்த மாணவர்களின் இருப்பிடங்களுக்குச்சென்று அங்குள்ள மந்தை, சமுதாயக்கூடங்கள், பள்ளிகளில் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதில் வேலையில்லா பட்டதாரிகள் தன்னார்வலர்களாக பயன்படுத்தப்பட உள்ளனர். இதற்கு 1.50 லட்சம் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். 

இதனடிப்படையில் முதல்கட்டமாக ஆய்வு அடிப்படையில்  8 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் என்னுடைய கோரிக்கையின் அடிப்படையில்  9}ஆவது மாவட்டமாக மதுரையும் சேர்க்கப்பட்டு இன்று முதல் இல்லம் தேடிக்கல்வித்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  திங்கள் முதல் வெள்ளி வரையிலான 5 நாள்களில் பள்ளி முடிந்த பிறகு மாலை நேரங்களில் இந்தக் கல்வி புகட்டும் திட்டம் செயல்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com