
சென்னை உயர்நீதிமன்றம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 மே 22 ஆம் தேதி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் வரையில் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரித்து வழக்கினை முடித்துவைத்திருந்த நிலையில் அதற்கு எதிராக சமூக ஆர்வலர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
மனித உரிமை ஆணையம் மீண்டும் விசாரணை நடத்தக்கோரி மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதிகள், 'கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக அரசுத் துறைகள் இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு' என்று குறிப்பிட்டதுடன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு கூடுதல் உதவி செய்ய பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இன்றைய விசாரணையில், மனித உரிமைகள் ஆணையம் விசாரணை குறித்த அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின் நகலை மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கக்கோரி அதற்க்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கக்கோரி பின்னர் வழக்கு ஆறு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிக்க | பட்ஜெட் கூட்டத் தொடா் நிறைவு: பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு