2024-ல் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தல்: பழனிசாமி

2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.  
பழனிசாமி
பழனிசாமி

நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையின் மூலம் 2024 ல் தமிழகத்திற்கு சட்டப்பேரவை தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் வர வாய்ப்புள்ளதாக சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தல் குறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், கூட்டுறவு வங்கிகளில் அரசியல் கட்சி சார்பில் யாரும் போட்டியிடுவதில்லை. எந்த ஆட்சியாக இருந்தாலும் வங்கி முறைகேட்டில் நடவடிக்கை எடுப்பார்கள். தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அனைத்திலும் முறைகேடு நடைபெற்றதாக தெரியவில்லை.
 
திமுக தேர்தல் அறிக்கை என்றைக்கும் நிறைவேற்றியதாக வரலாறு இல்லை. ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்து நீட் ரத்து செய்வேன் என்று கூறிய ஸ்டாலின் அதை செய்யவில்லை. நாங்கள் போட்ட தீர்மானத்தையே அவர்களும் சட்டசபையில் நிறைவேற்றியுள்ளனர்.

நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற கோரிக்கையை நம்பி 43 லட்சம் பேர் காத்திருந்தனர். தேர்தல் நேரத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள். ஆனால், இப்போது கூட்டுறவு வங்கி நகைக்கடன் ரத்து செய்வதற்கும் ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.
 
2024-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் தேர்தல் நடக்கும் என்பால், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் ஆயிரம் பேர் வரை அமரும் வகையில் கட்டப்படுகிறது. எனவே எம்.பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
 
ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் 8 பேர் மட்டுமே மருத்துவகல்வி பயின்ற நிலையில், அதிமுக அரசு 7.5 சத இட ஒதுக்கீடு அளித்ததால் 435 மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்தது. அதே முறையை திமுக அரசும் பின்பற்றி இருக்கிறது.
 
 திமுகவைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது சொத்துகுவிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி யாருமே அவர்களிடம் கேள்வி கேட்பதில்லை. அதிமுகவை மட்டுமே ஊடகங்கள் பேசி வருகின்றன. ஆட்சியில் இருக்கும்போதும், இப்போதும் அதிமுகவை மட்டுமே குறிவைத்து செய்திகள் வெளியிடப்படுகின்றன. மக்கள் பிரச்னையை எடுத்துச் சொன்னால் யாரும் வெளியிடுவதில்லை. நெல் கொள்முதல் செய்யாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதை யாரும் செய்தி வெளியிடுவதில்லை. தொலைக்காட்சிகள் மனசாட்சியின்றி செயல்படுகின்றன. அரசுக்கு எதிராக செய்தி போட பயப்படுகின்றன.
 
டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யாமல் தேங்கி கிடக்கின்றன.கொள்முதல் செய்யாததால் அந்த மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி விட்டன.திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 4 மாதங்களாகி விட்டது. மக்கள் பிரச்சினைகளை கவனிக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு நன்மை செய்யாமல் அதிமுக மீது புழுதி வாரி தூற்றுவதையும் அவதூறு செய்வதையே திமுக அரசு செய்து வருகிறது என்று எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

அப்போது அதிமுக அமைப்பு செயலாளர் எஸ்.செம்மலை, மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.மணி ஆகியோர் உடன் இருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com