58% குடியிருப்புகளுக்கு 25% மட்டுமே சொத்து வரி உயர்வு: அமைச்சர் கே.என். நேரு விளக்கம்

மத்திய அரசின் பரிந்துரையின்பேரில்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மத்திய அரசின் பரிந்துரையின்பேரில்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அதிலும் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்காத வகையில்தான் வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார். 

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயா்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உயா்வானது (2022-2023) உடனடியாக அமலுக்கு வருகிறது. குறைந்தபட்சம் 25 சதவீதம் முதல் அதிகபட்சம் 150 சதவீதம் வரை சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, 'மத்திய அரசின் பரிந்துரைப்படி, 15 ஆவது நிதி ஆணையம் 2021-22 சொத்துவரியை உயர்த்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. தூய்மை இந்தியா, அம்ருத் 2.0 ஆகிய திட்டங்களின் கீழ் நிதி பெறுவதற்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சொத்துவரி குறித்த உயர்வை அறிவிப்பது கட்டாயம் என்று கூறியதால்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 

2018 ஆம் ஆண்டு அதிமுக அரசு, குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50%, குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100% என வரி உயர்த்தியது. ஆனால், தேர்தல் வந்ததால் அவை நிறுத்தி வைக்கப்பட்டது. 

தற்போது தமிழகத்தில் 83% வீடுகளுக்கு மட்டுமே 25% முதல்  50% வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதில் 58% குடியிருப்புகளுக்கு 25% மட்டுமே வரி உயர்த்தப்பட்டுள்ளது. 

7% பகுதி மக்களுக்கு மட்டுமே 100% லிருந்து 150% வரி உயர்வு விதிக்கப்பட்டுள்ளது. அதில் 1.47% குடியிருப்புகளுக்கு மட்டுமே 150% வரி விதிக்கப்பட்டுள்ளது. 

ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்காத வகையில்தான் வரி உயர்த்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் சொத்து வரி குறைவாக உள்ளது. 

பொருளாதார அடிப்படையில் 83% மக்களுக்கு இதனால் பாதிப்பில்லை. 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவைகளின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நிலத்தின் வழிகாட்டு மதிப்பீடு ஒப்பிடும்போது இப்போது உயர்ந்திருக்கிறது' என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com