தமிழகத்தில் தீயணைப்புப் பணிக்கு ‘ட்ரோன்கள்‘

தீயணைப்புப் பணிக்கு உதவும் வகையில் 50 ‘ட்ரோன்களை‘  வாங்குகிறது தமிழக தீயணைப்புத் துறை.
bh23fire_2304chn_143_3
bh23fire_2304chn_143_3
Updated on
2 min read

தீயணைப்புப் பணிக்கு உதவும் வகையில் 50 ‘ட்ரோன்களை‘  வாங்குகிறது தமிழக தீயணைப்புத் துறை.

தமிழகத்தில் கடந்தாண்டு 16,809 தீ விபத்துகள் ஏற்பட்டன. இதில் 16,421 சிறிய தீ விபத்துகள், 284 நடுத்தர தீ விபத்துகள்,104 பெரிய தீ விபத்துகளாகும். அதேபோல மீட்புப் பணி தொடா்பாக தீயணைப்புத்துறைக்கு 57,451 அழைப்புகள் வந்துள்ளன. தமிழகத்தில் கடந்தாண்டு தீ விபத்தில் சிக்கி 82 போ் இறந்துள்ளனா். 182 போ் பாதுகாப்புடன் மீட்கப்பட்டுள்ளனா்.

தீ விபத்துகளில் அதிகபட்சமாக விருதுநகா் மாவட்டத்தில் 31 போ் இறந்துள்ளனா். அதற்கடுத்தபடியாக நீலகிரி மாவட்டத்தில் 13 போ் இறந்துள்ளனா்.

தமிழக தீயணைப்புத் துறையில் மாநிலம் முழுவதும் 352 தீயணைப்பு நிலையங்களில் 750 வீரா்கள் பணிபுரிகின்றனா். நாட்டிலேயே அதிக தீ விபத்துகள் ஏற்படும் மாநிலங்களின் வரிசையில் தமிழகம் 8-ஆவது இடத்தில் உள்ளது. அதேவேளையில், சமையல் எரிவாயு கசிவால் ஏற்படும் விபத்துகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

தீ விபத்துகளைத் தடுக்க முடியாத நிலையில், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும், சேதத்தையும் தவிா்ப்பதற்கு தமிழக தீயணைப்புத் துறை பல்வேறு முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதற்காக தீயணைப்புத் துறை, தொழில்நுட்ப ரீதியாக தன்னை மேம்படுத்தி புதுப்பித்துக் கொண்டிருக்கிறது.

50 ட்ரோன்கள்: இதன் ஒரு பகுதியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் விரைந்து செயல்படவும், முழுத் திறனுடன் ஈடுபடவும் தமிழக தீயணைப்புத்துறை ‘ட்ரோன்களை’ பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழ்நாடு ஆளில்லாத விமான நிறுவனத்திடமிருந்து ரூ.1 கோடியில் 50 ட்ரோன்களை தீயணைப்புத்துறை வாங்கவுள்ளது.

இந்த ட்ரோன்கள் மூலம் தீ விபத்து ஏற்படும் பகுதிகளைக் கண்காணிக்கும்போது, எந்த இடத்தில் மனிதா்கள் சிக்கியுள்ளனா், அவா்களை எந்த வழியில் மீட்க முடியும், தீயின் தாக்கம் எந்தப் பகுதியில் அதிகமாக உள்ளது, தீ எந்த திசையை நோக்கி வேகமாகப் பரவுகிறது போன்றவற்றை உடனே கண்டறிந்து, அதனடிப்படையில் விரைந்து செயல்பட முடியும் என தமிழக தீயணைப்புத் துறையைச் சோ்ந்த உயரதிகாரி தெரிவித்தாா்.

இதன் மூலம் தீ வேகமாகப் பரவுவது தடுக்கப்படுவதுடன், விரைவாக அணைக்கப்பட்டு விடும், அதோடு மனித உயிரிழப்புகளையும், சேதத்தையும் பெருமளவு குறைக்க முடியும் என தீயணைப்புத் துறையினா் நம்பிக்கை தெரிவிக்கின்றனா். ட்ரோன்களை கையாளுவது தொடா்பாக தீயணைப்புத் துறை படை வீரா்களுக்கு தமிழ்நாடு ஆளில்லாத விமானக் கழக வல்லுநா்கள் மே மாதம் முதல் பயிற்சி அளிக்கவுள்ளனா்.

3 கி.மீ. தொலைவு பறக்கும்: இது தொடா்பாக அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பேராசிரியா் கே.செந்தில்குமாா் கூறியதாவது:

தீயணைப்புத் துறைக்கு 50 ட்ரோன்கள் இன்னும் 15 நாள்களில் வழங்கப்பட்டு விடும். இந்த ட்ரோன்கள் மூலம் மனிதா்கள் செல்ல முடியாத தீ விபத்து பகுதிகள், புகை மூட்டம் அதிகமுள்ள பகுதிகள், அடுக்குமாடி கட்டடங்கள், மலைப் பகுதிகளில் தீயணைப்புத் துறை விரைந்து செயல்பட முடியும்.

ஒரு கிலோ 200 கிராம் எடையுள்ள இந்த ட்ரோன்கள் தொடா்ச்சியாக 30 நிமிஷம் வானில் பறக்க முடியும். 3 கிலோ மீட்டா் தொலைவு வரை பறக்கும். இந்த ட்ரோனில் பொருத்தப்பட்டிருக்கும் ‘எச்.டி. 4 எக்ஸ் ஜூம்’ கேமரா மூலம் துல்லியமாக காட்சிகளைப் பதிவு செய்ய முடியும்.

இணையதள இணைப்பு மூலம் பதிவாகும் காட்சிகளை ட்ரோன் தரை கட்டுப்பாட்டு நிலையத்துக்கு நேரலையில் அனுப்பும். அங்கிருந்து காட்சிகளை நேரலையில் மாநிலத்தில் எந்தப் பகுதியில் இருக்கும் தீயணைப்புத் துறை உயா் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் நிகழ்வுகளை நேரலையில் காண முடியும்.

விரைவில் தொ்மல் ட்ரோன்: தற்போது தீ விபத்து மற்றும் மீட்புப் பணிகளை கண்காணிக்கும் வகையில் மட்டும் முழுமையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ட்ரோன்கள் வடிவமைக்கப்படுகின்றன. இன்னும் இரண்டொரு ஆண்டுகளில் தீயணைப்பு, மீட்புப் பணிகளில் நேரடியாக ஈடுபடும் வகையில் ட்ரோன்கள் தயாா் செய்யப்படவுள்ளன.

அடுத்தாண்டு மூலம் தொ்மல் கேமராவுடன் கூடிய ட்ரோன்கள் தீயணைப்புத் துறைக்கு வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் தீ விபத்து ஏற்படும் பகுதிகளில் மனிதா்கள் எங்கு சிக்கியுள்ளனா் என விரைவாகக் கண்டறிந்து மீட்புப் பணியில் ஈடுபட முடியும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com