ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீயை அணைக்கும் பணி தீவிரம்

தீ விபத்துக்குள்ளான சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. குடிநீர் வாரியத்தின் தண்ணீர் லாரிகளும் தீயணைப்புப் பணிக்கு வந்துள்ளன.
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..

சென்னை: தீ விபத்துக்குள்ளான சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. குடிநீர் வாரியத்தின் தண்ணீர் லாரிகளும் தீயணைப்புப் பணிக்கு வந்துள்ளன.

தீ விபத்து நிகழ்ந்த தளத்தின் சிமெண்ட் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, அதன் வழியாக குழாய்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

கல்லீரல் சிகிச்சைப் பிரிவில் சில நோயாளிகள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் அவர்களை மீட்கும் பணியிம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

தீ விபத்து நிகழ்ந்த பகுதி, அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம் என்றும், கல்லீரல் சிகிச்சைப் பிரிவு என்றும் இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வந்த தளத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு திடீரென தீ விபத்து நேரிட்டது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் இரண்டாவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் அறுவை சிகிச்சைப் பிரிவில் இந்த தீ விபத்து நேரிட்ட நிலையில், திடீரென வெடிசப்தம் கேட்டது. வெடி சப்தத்தைத் தொடர்ந்து கரும்புகை வெளியேறி வருவதால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாகக் காட்சியளிக்கிறது.

அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறை என்பதால், அங்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் இருக்கலாம், அவைதான் வெடிக்கின்றன என்றும் சம்பவ இடத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து மின் கசிவு காரணமாக தீ விபத்து  நேரிட்டதாக முதற்கட்ட செய்திகள் வெளியாகின. இதுவரை எத்தனை நோயாளிகள் அங்கு சிக்கியிருக்கிறார்கள் என்ற தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

கீழ் தளத்தில் தீப்பற்றி, அதனால் எழும் புகை முழுவதும் மேல் தளத்துக்குச் செல்வதால் அங்கிருக்கும் நோயாளிகளுக்கு பாதிப்பு எழக்கூடும் என்பதால் அவர்களை பத்திரமாக மீட்கும் பணி நடந்து வருகிறது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மீட்புப் படையினர், மருத்துவமனை வளாகத்துக்குள் சிக்கிக் கொண்ட நோயாளிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிபத்து நேரிட்ட நிலையில், திடீரென அந்த கட்டடத்துக்குள் வெடி சப்தம் கேட்டது.  வெடி சப்தத்தைத் தொடர்ந்து கட்டடத்துக்குள் இருந்து கரும்புகை வெளியானது. இதனால், அந்த அறைக்குள் வெடிக்கும் வகையில் எந்தவிதமான பொருள்கள் இருக்கின்றன என்று தீயணைப்புத் துறையினர் கேட்டுவருகிறார்கள்.

தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணி நடந்து வரும் நிலையில், தீ விபத்து நிகழ்ந்த அறைக்குள் எத்தனை நோயாளிகள் சிக்கியிருக்கிறார்கள் என்பது குறித்த விவரம் உடனடியாக வெளியாகவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com