முதுபெரும் இடதுசாரி தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர்.நல்லகண்ணு
முதுபெரும் இடதுசாரி தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர்.நல்லகண்ணு

தகைசால் தமிழர் விருது: ஆர்.நல்லகண்ணு தேர்வு!

தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
Published on

தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஆர். நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்ளைப் பெருமைப்படுத்தும் வகையில், 2021 -ஆம் ஆண்டு முதல் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது தமிழ்நாடு அரசு வழங்கிவருகிறது. 

இந்த ஆண்டிற்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, விடுதலைப் போராட்ட வீரராகத் தன் இளம் வயதைச் சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவரும் ஏழை எளிய மக்களுக்காகக் குரல் கொடுத்து, சமூக நல்லிணக்கத்தினையும், சுற்றுச்சூழலையும் காத்திடத் தொடர்ந்து பாடுபட்டு வருவதுடன், சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாகவும் பணியாற்றி, தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. 

“தகைசால் தமிழர்” விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர். நல்லகண்ணுவுக்கு, ரூ. 10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச்சான்றிதழும், வரும் சுதந்திர நாள் விழாவில் முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்குவார்.

2021 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான என். சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com