'அதிக வட்டி தருவதாகக் கூறினால் மக்கள் ஏமாறக் கூடாது'

அதிக வட்டி தருவதாகக் கூறினால், மக்கள் ஏமாந்து அந்த நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யக் கூடாது என்று பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
'அதிக வட்டி தருவதாகக் கூறினால் மக்கள் ஏமாறக் கூடாது'
'அதிக வட்டி தருவதாகக் கூறினால் மக்கள் ஏமாறக் கூடாது'


சென்னை: அதிக வட்டி தருவதாகக் கூறினால், மக்கள் ஏமாந்து அந்த நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யக் கூடாது என்று பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை அமைந்தகரை மேத்தாநகரை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூா், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூா் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தங்கம் விற்பனை, ரியல் எஸ்டேட், தங்க நகைக்கு கடன் வழங்குவது, தங்க சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிதி மற்றும் தங்கம் சாா்ந்த வணிகத்தை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் பெயரில் சமூக வலைதளங்களில் அண்மையில் கவா்ச்சிகரமான ஒரு விளம்பரம் வெளியானது. அதில், எங்கள் நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பி பலா் முதலீடு செய்ததாகவும் கூறப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் மக்களிடம் ஆசையைத் தூண்டி, பண மோசடியில் அந்த நிறுவனம் ஈடுபடுவதாக புகாா் எழுந்தது.

இது தொடா்பாக வந்த புகாா்களின் அடிப்படையில், தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், பண மோசடியில் அந்த நிறுவனம் ஈடுபட்டதற்கான சில ஆதாரங்கள் கிடைத்தன. இதையடுத்து கடந்த மே மாதம் 24-ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் ஆருத்ரா நிறுவனம் தொடா்புடைய சென்னை, ராணிப்பேட்டை, ஆரணி, ஓசூா் உள்பட 26 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனா்.  பண மோசடி தொடா்பாக வழக்குப் பதியப்பட்டு, ஆருத்ரா நிறுவன நிா்வாகிகள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

இந்த விவகாரம் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நிதி மோசடி செய்த ஆருத்ரா நிறுவனத்தின் ரூ.85 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ.150 கோடி மதிப்புள்ள சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சுமார் 93,000 வாடிக்கையாளர்களிடம் ஆருத்ரா நிறுவனம் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்துள்ளது. முதலீட்டாளர்களிடம் வசூலித்த தொகையில் நிதி நிறுவனம் ஏராளமான சொத்துகள் வாங்கிக் குவித்துள்ளது. இந்த எல்பின் நிறுவன மோசடி வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்கிகள் அல்லா நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 12 சதவீதம் தான் வட்டி வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆருத்ரா நிதி நிறுவனம் 15 முதல் 25 சதவீதம் வரை வட்டி தருவதாக ஆசைவார்த்தைக் கூறி மக்களை ஏமாற்றியுள்ளனர். எனவே, அதிக வட்டி தருவதாகக் கூறினால் மக்கள் ஏமாந்து முதலீடு செய்ய வேண்டாம். சாத்தியமில்லாத திட்டத்தை அறிவிக்கும் நிறுவனங்கள் மீது காவல்துறை தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

முதலீட்டாளர்களின் பணம் திரும்பக் கிடைக்குமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நிதி நிறுவன சொத்துகள் பறிமுதல் செய்து, நீதிமன்றம் மூலம் முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்பக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com