சாத்தான்குளம் வழக்கு: 'தந்தை-மகனின் ரத்தக்கறை கைலிகளை குப்பையில் வீசிய காவலர்கள்'

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில்  தந்தை மகனின் இரத்தக் கறை படிந்த கைலிகளை குப்பைத் தொட்டியில் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் வீசி எறிந்துள்ளனர் : சிபிஐ குற்றப்பத்திரிகை
ஜெயராஜ் - பென்னிக்ஸ்
ஜெயராஜ் - பென்னிக்ஸ்
Published on
Updated on
2 min read

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில்  தந்தை மகனின் இரத்தக் கறை படிந்த கைலிகளை குப்பைத் தொட்டியில் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் வீசி எறிந்துள்ளதாக சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல் துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். 

இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்ட கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர்  ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது கடந்த வெள்ளிக்கிழமை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணை நடைபெற்றது.

அப்போது இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ தரப்பில், வழக்கில் ஏற்கனவே முதற்கட்டமாக 2027 பக்கம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் கட்டமாக கூடுதலாக 400 பக்கம் அளவிலான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது

அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட  குற்றப்பத்திரிக்கையில், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள், 19.06.2020 அன்று மாலை, காமராஜர் பஜாரில்  இருந்து இறந்த ஜெயராஜை சட்டவிரோதமாக அழைத்துச் சென்று,  அவர்கள் இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில்  கொடூரமாக சித்திரவதை செய்து,  கடுமையான காயங்களை ஏற்படுத்தி உள்ளனர். அதன் பின்  தந்தை மகன் இருவர் மீதும்  பொய் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தின் சுவர்களிலும்,  தரையிலும் மற்ற இடங்களிலும் பரவிய பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோரின் காயங்களில் இருந்து கசிந்த இரத்தத்தை சுத்தப்படுத்துமாறு குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளால் இறந்த பென்னிக்ஸ் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு பொதுவான நோக்கத்துடன்  குற்றவியல் சதித்திட்டம் தீட்டி உள்ளனர்.

மேலும், நீதிபதி இரத்தக் கறை படிந்த துணிகள் பார்த்துவிடுவார் என்ற அச்சத்தில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் இருவரின் உடைகள் மீண்டும் மருத்துவமனையில் மாற்றப்பட்டன .

இறந்தவரின் துணிகளை மாற்றிய பிறகு, இறந்தவரின் இரத்தக் கறை படிந்த லுங்கிகளை குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் குப்பைத் தொட்டியில் வீசி உள்ளதாகவும்,

சாத்தான்குளம் காவல் நிலைய சுவர்களில் இருந்த ரத்தம், இருவரையும் தாக்கிய லத்திகளில் இருந்த ரத்தகரை ஆகிய இரண்டும் தடயவியல் ஆய்வு முடிவில் உறுதியாகி உள்ளது எனவே சிபிஐ யின் குற்றசாட்டு உறுதியாகிறது எனவும், 

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர்  ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள்  முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை ஆகியோர் காவல் நிலையத்தில்  தந்தை மகன் இருவரையும் துன்புறுத்தியுள்ளது விசாரணையில் உறுதியாகத் தெரியவந்துள்ளது எனவும், தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து உயிரிழந்த பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜை ஆகியோரை  சிறையில் அடைத்து வைக்கும் நோக்கில் குற்றவியல் சதியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com