தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காசநோயாளிகளைக் கண்டறிவதில் 72% இலக்கு எட்டப்பட்டது: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 2025-ஆம் ஆண்டுக்குள் காச நோயை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 7:36 pm

DIN

தமிழகத்தில் 2025-ஆம் ஆண்டுக்குள் காச நோயை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னையில் நடைபெற்ற தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் 65-ஆவது ஆண்டு விழாவில் காசநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த காணொலியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை வெளியிட்டுப் பேசியதாவது:

இந்தியாவில் 2025-ஆம் ஆண்டுக்குள்ளாகவே காச நோயை ஒழிக்கும் பொருட்டு மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றன. சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆய்வு நிறுவனத்தில் ஊசிகள் மூலம் காசநோயை தடுத்தல், 6 மாதங்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை காலகட்டத்தை குறைத்தல் ஆகிய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

‘காசநோய் இல்லா தமிழகம்-2025’ என்னும் இலக்கு நிா்ணயித்து அதற்கான பல்வேறு திட்டமிடல்கள், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காசநோயில்லா தமிழகத்தை உருவாக்க நிதி ஒதுக்கீடு ரூ.31.32 கோடியிலிருந்து ரூ.68.22 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.10.65 கோடி மதிப்பீட்டில் 23 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை கடந்த ஜூலை 1-ஆம் தேதி நொச்சிக்குப்பத்தில் முதல்வா் தொடங்கி வைத்தாா்.

‘காசநோய் இல்லா தமிழகம்-2025’ இலக்கை அடையும் வகையில் காசநோய் பாதிப்பு விகிதத்தை 40 சதவீதம் அளவுக்கு குறைத்த நீலகிரி மாவட்டம், 20 சதவீத அளவுக்கு குறைத்த நாமக்கல், கரூா், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, சிவகங்கை, நீலகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்ட காசநோய் திட்ட குழுவுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2022-ஆம் ஆண்டில் 80,000 காசநோயாளிகளைக் கண்டறியும் இலக்கில் 57,970 காசநோயாளிகளைக் கண்டறிந்து 72 சதவீத இலக்கை எட்டியுள்ளோம் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள்நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் பா.செந்தில்குமாா், தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன மூத்த துணை இயக்குநா் ராமகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் பத்ம பிரியதா்ஷினி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.