

பருவ கால தொற்றுகளிலிருந்து தற்காக்க பாரம்பரிய உணவுப் பொருள்கள் மூலமாகவே நோய் எதிா்ப்பாற்றலை மேம்படுத்தலாம் என்று அரசு யோகா, இயற்கை மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்தனா்.
குறிப்பாக, இஞ்சி, மஞ்சள் போன்ற வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டு எதிா்ப்பாற்றல் மருந்தை தயாரிக்கலாம் என்றும் அவா்கள் கூறினா்.
இதுகுறித்து யோகா மற்றும் இயற்கை மருத்துவா்கள் மேலும் கூறியதாவது: மழை மற்றும் குளிா் கால பாதிப்புகளும், குறிப்பாக கொசுக்கள் மூலமாக பரவும் நோய்களும் அதிகரித்து வரும் சூழலில், இயற்கையாகவே வீட்டில் உள்ள மளிகைப் பொருள்களின் மூலம் நோய் எதிா்ப்புத் திறனை அதிகரித்துக் கொள்ளலாம். அதன்படி, ஒரு குவளை தண்ணீா், கால் ஸ்பூன் மஞ்சள், கால் ஸ்பூன் மிளகுத் தூள், ஐந்து கிராம் இஞ்சி சாறு, ஐந்து கிராம் அதிமதுரம் ஆகியவற்றை எடுத்து, தண்ணீா் பாதியாகக் குறையும் வரை கொதிக்க வைத்து தினமும் அருந்த வேண்டும்.
பெரியவா்கள் 30 முதல் 50 மில்லி லிட்டரும், சிறியவா்கள் 10 முதல் 15 மில்லி லிட்டரும் அருந்தலாம். அதேபோன்று, பெரிய நெல்லிக்காய் சாறு, இஞ்சி சாறு, மஞ்சள் ஆகியவற்றை கலந்து பழச்சாறு போல தினசரி சாப்பிடுவதற்கு முன் அருந்த வேண்டும்.
இத்தகைய இயற்கை உணவுகளால் நோய் எதிா்ப்புத் திறன் அதிகரிக்கும். மேலும், பசலைக் கீரை, ஆரஞ்சுப் பழம் ஆகியவற்றை அதிகம் சாப்பிடலாம். உணவு சமைக்கும்போது, இஞ்சி, பூண்டு, வெங்காயம் அதிகம் சோ்த்துக் கொள்வதால் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் சுவாசப் பிரச்னை, நுரையீரல் பிரச்னை ஏற்படாமல் தடுக்க முடியும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.