திமுக சார்பில் 100 சிறப்பு பொதுக் கூட்டங்கள்!

திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி, 100 சிறப்புப் பொதுக்கூட்டங்கள் நடத்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)
அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி, 100 சிறப்புப் பொதுக்கூட்டங்கள் நடத்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக வெளியிட்ட செய்தியில்,

நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராக இருந்து, இன -மொழி உரிமைக்காகக் குரல் கொடுத்தவர் அன்பழகன். சட்டப் பேரவையில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என இரு வரிசைகளிலும் உறுப்பினராக இருந்து ஜனநாயக மாண்பு காத்தவர். சட்ட மேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, தன் பங்களிப்பை நிறைவேற்றியவர் அன்பழகன்.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக் காலங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலத்துறை, நிதித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளுக்கு அமைச்சராக இருந்து மக்களுக்கானத் திட்டங்களை திறம்பட நிறைவேற்றியவர்.

அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாள்  தொடக்க விழாவினையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் கடந்த 19.12.2021 அன்று அவரது சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து,  கருவூல கணக்குத் தொடர்பான அலுவலகங்கள் உள்ளிட்ட 15 அரசு அலுவலகங்கள் இயங்கி வரும் அந்த வளாகத்திற்கு “பேராசிரியர் அன்பழகன் மாளிகை” எனப் பெயர் சூட்டி, அன்பழகன் படைத்த நூல்களையும் நாட்டுடைமையாக்கி - நூலுரிமைத் தொகையையும் அவரின் குடும்பத்தாருக்கு வழங்கி 7500 கோடி ரூபாய் மதிப்பில் “அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்” நேற்று (30.11.2022) அறிவித்தார்.

அவரது நூற்றாண்டு நிறைவைப் போற்றும் வகையில் இந்த வருடம், 19.12.2022 அன்று தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் அன்பழகனின் திருவுருவச் சிலை  நிறுவி, அந்த வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்” என்று அழைக்கப்படும் எனவும், கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ள முதல்வருக்கு நன்றி.

அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி, திமுக தலைமை சார்பில் டிசம்பர் 15 (வியாழக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது. அந்த கூட்டங்களை மாவட்டச் செயலாளர்கள் சிறப்புடன் நடத்திட இந்தக்கூட்டம் தீர்மானிக்கிறது.

அதேபோல் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் டிசம்பர்-17 (சனிக்கிழமை) அன்று அன்பழகனின் பொது வாழ்வைப் போற்றிடும் கவியரங்கம் நடைபெறும். டிசம்பர்-18 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வடசென்னையில்,   மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com