அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

'மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் குறித்து நாடாளுமன்றத்தில் ஓங்கிக் குரல் கொடுத்தவர் பேராசிரியர் அன்பழகன்'

மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் குறித்து நாடாளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுத்தவர் பேராசிரியர் க.அன்பழகன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :19 டிசம்பர் 2022, 6:31 am

DIN

மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் குறித்து நாடாளுமன்றத்தில் ஓங்கிக் குரல் கொடுத்தவர் பேராசிரியர் க.அன்பழகன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் 101ஆவது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இனமானப் பேராசிரியர் அன்பழகனாரின் நூற்றாண்டு விழா நிறைவு பெற்று, 101-ஆவது பிறந்தநாள் இன்று! இனமானமும், தன்மானமும், மொழி உணர்வும், இன உணர்வும் பிறந்த நாள் இன்று!

ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினர், 1967-1971 வரையில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், இருமுறை கல்வித் துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், சமூகநலத்துறை அமைச்சர், முத்தமிழறிஞர் கருணாநிதி ஐந்தாம் முறையாக முதல்வர் பொறுப்பேற்ற 2006-2011 காலத்தில் நிதியமைச்சர், 1977-ஆம் ஆண்டு தொடங்கி 2020 வரையிலும் கட்சியின் பொதுச் செயலாளர் எனத் தமிழ்நாட்டின் அரசியலிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றிலும் எவராலும் அழிக்க முடியாத் தடத்தை விட்டுச் சென்றுள்ளார் பேராசிரியர்.

சுயமரியாதை இயக்க காலந்தொட்டு - இன்றைய திராவிட மாடல் ஆட்சிக்காலம் வரையில் தனது  உரையால் வழிநடத்திக் கொண்டு இருந்த பேராசிரியப் பெருந்தகை இப்போதும் உணர்வால் வழிநடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதி ஆகியோரைப் போலவே இனமானப் பேராசிரியரின் சிந்தனையும் தொண்டும் கடந்த முக்கால் நூற்றாண்டு காலமாகத் தமிழகத்துக்கு முழுப்பயனைக் கொடுத்த மூலக்கருத்தியல் சிகரம் ஆகும். திராவிடவியல் கோட்பாட்டுக்கு விளக்கவுரை தீட்டியவர் மட்டுமல்ல, விளக்காகவும் இருந்தவர் பேராசிரியர். அவர் காட்டிய இனமான ஒளியில் நமது பயணம் தொடர்கிறது.

இந்தியத் துணைக் கண்டத்தின் நிலப்பரப்பில் தமிழன் யாருக்கும் தாழ்ந்தவனல்ல என்பதை மெய்ப்பிக்கும் தொண்டே தனது பணி என்று சொன்னவர் பேராசிரியர். அத்தகைய இலக்கைக் கொண்டதாகவே திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர்களில் முதலிடம், மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் என்ற இலக்கைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு அடைந்துள்ளது என்றால் இதுதான் பேராசிரியர் காணவிரும்பிய கனவுத் தமிழ்நாடு.

நீதிக்கட்சி காலத்து சமூகநீதி - வகுப்புரிமை - ஆகியவை எந்தக் காலத்திலும் எந்தச் சூழலிலும் பட்டுப் போய்விட அனுமதிக்கக் கூடாது என்பதைப் பேராசிரியர் மேடைதோறும் வலியுறுத்திக் கொண்டு இருந்தார். சமூகநீதிக் கருத்தியல், வகுப்புரிமை இன்று இந்தியா முழுமைக்கும் ஒலிக்கும் சொல்லாக - யார் நினைத்தாலும் அதில் கை வைக்க முடியாத கருத்தியலாக இருக்கிறது.

மாநில சுயாட்சி - மாநில உரிமைகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் ஓங்கிக் குரல் கொடுத்தவர் பேராசிரியர். இன்று இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களிலும் மாநில சுயாட்சிக் குரல்கள் கேட்கத் தொடங்கி இருக்கிறது. அகில இந்தியக் கட்சிகளே மாநில சுயாட்சிக் கொள்கைகளைப் பேசத் தொடங்கி இருக்கும் காட்சியை இப்போது பார்க்கிறோம். நூற்றாண்டு விழா காணும் காலத்தில் பேராசிரியரின் பெரும்பாலான கனவுகள், பெரும்பாலானவர்களின் கனவுகளாக விரிவடைந்து வருகின்றன.

''ஒவ்வொரு நாளும் உறங்கப்போகுமுன் தமிழின மீட்சிக்கு இன்று நாம் என்ன செய்தோம் என்பதை எண்ணிப் பாரீர்!" என்று வேண்டுகோள் வைத்தார் பேராசிரியர். இதனை மனதில் நிறுத்தி ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற இலக்கை நோக்கி இவ்வையகம் உயரப் பேராசிரியரின் 101-ஆவது பிறந்தநாளில் உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.