புதிய வகை கரோனா : பாதுகாப்பான நிலையில் தமிழகம் -மா.சுப்பிரமணியன்

உலக நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் இருந்து  வந்தாலும்,  தமிழகம்  தற்போது பாதுகாப்பான நிலையில் உள்ளது என்றார்  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தூத்துக்குடி: உலக நாடுகளில் மீண்டும் கரோனா பரவல்  இருந்து வந்தாலும்,  தமிழகம் தற்போது பாதுகாப்பான  நிலையில் உள்ளது  என்றார்  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

கன்னியாகுமரியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை காலையில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் அதைத் தடுக்க, மருந்துகள் கையிருப்பு, போதுமான படுக்கைகள், ஆக்சிஜன் ஆகியவை கையிருப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

மேலும், அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்துவரும் காரணத்தால், அந்த நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு, கரோனா அறிகுறிகள் இருந்தால், பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். குறிப்பாக ஜப்பான், சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களை ரேண்டமாக 2 சதவீதம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள கோவை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளோடு வருபவர்களுக்கு இன்று முதல் பரிசோதனை அமைக்கப்படும்.

மேலும், ஆறு மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் இருக்கிறது. படுக்கைகளை பொருத்தவரை கரோனாவிற்கு என்று ஏற்கனவே ஏற்பாடு செய்த படுக்கைகள் அனைத்தும் கையிருப்பில் இருக்கிறது.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், தமிழகம் முழுவதிலும் திறந்து வைக்கப்பட்டது. குழந்தைகளுக்கும் பிரத்தியேகமாக படுக்கைகள் உள்ளது. எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம். 

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி முதல் தவணை 96 சதவீதம், இரண்டாவது தவணை 92 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதனால், 90 சதவீதத்துக்கு மேற்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தொடர்ச்சியாக இருக்கும்.

இங்கு, கடந்த 6 மாத காலமாக இழப்பு ஏதும் இல்லாத நிலை உள்ளது.  கடந்த 10 நாட்களில் 6, 7, 8 என்கிற வகையிலே தான் பாதிப்பும் வந்துகொண்டிருக்கிறது.
மேலும், நேற்று பரிசோதனை செய்யப்பட்டதில் 6 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது, எனவே மிக பாதுகாப்பான நிலையில் தமிழகம் உள்ளது.

மேலும், மக்கள் அதிகமாக கூடுகிற இடங்களில் பாதுகாப்புக்காக முகக் கவசங்கள் அணிவதும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மாதிரியான கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com