நம்ம ஸ்கூல் திட்டம் தொடக்க விழாவிற்காக ரூ.3 கோடி செலவு செய்யப்பட்டதா?- அமைச்சர் பதில்

நம்ம ஸ்கூல் திட்டம் தொடக்க விழாவிற்காக ரூ.3 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது என்கிற எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
நம்ம ஸ்கூல் திட்டம் தொடக்க விழாவிற்காக ரூ.3 கோடி செலவு செய்யப்பட்டதா?- அமைச்சர் பதில்

நம்ம ஸ்கூல் திட்டம் தொடக்க விழாவிற்காக ரூ.3 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது என்கிற எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார். 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கனவுக்கு ஆதாரமாய் விளங்கும் பள்ளிக்கூடங்களை வலுப்படுத்தவும், கல்வித் தரத்தை மேலும் உயர்த்தவும் முதல்வரின் வழிகாட்டலிலும் தலைமையிலும் பள்ளிக் கல்வித்துறை உருவாக்கியுள்ள “நம்ம ஸ்கூல்” என்னும் “நம்ம ஊர்ப் பள்ளி திட்டத்திற்கு” ஒரே நாளில் 50 கோடி ரூபாய் நன்கொடை வந்திருப்பதைப் பொறுத்துக் கொள்ள இயலாத வயிற்றெரிச்சலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்திருக்கும் அறிக்கை மிகுந்த கண்டனத்திற்குரியது.
திராவிட மாடல் அரசின்கீழ், பரந்துபட்ட சமூகத்தின் இலட்சியங்களுக்குச் செவிசாய்க்கும் பொதுக் கல்வி முறையை நோக்கி தமிழ்நாடு இன்று நகர்ந்துகொண்டிருக்கிறது. சமூகநீதி, உள்ளடக்கிய கல்வி, பாலின சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் பள்ளியோடு தொடர்புடைய சமூகத்தைப் பள்ளிக்குப்
பொறுப்பாக மாற்றுவது போன்ற அனைத்தையும் கொண்ட கல்வி முறையை உருவாக்குவது அவசியம் என்பதை உணர்ந்து, அதற்கான முன்னெடுப்புகளை
மேற்கொள்ள முதல்வரின் தலைமையின் கீழ் உள்ள இந்த அரசு உறுதிபூண்டு, அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
அண்மையில் உருவாக்கப்பட்ட நம்ம ஸ்கூல் - நம்ம ஊர்ப் பள்ளி போன்ற ஒரு திட்டம் நாட்டிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. தி.மு.க. அரசு உறுதியாகக் கடைப்பிடிக்கும் கொள்கைகளின் வழி இயல்பாக உருவாக்கப்பட்ட திட்டம் இது. அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக உள்ளூர்ச் சமூகம் முன்வர வேண்டும் என்றால் அரசும் பொதுமக்களும் இணைவது அவசியம் என்கிற புரிதலோடும் உயர்ந்த நோக்கத்தோடும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கையில் உள்ள பல தகவல்கள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை; தவறாக முன்வைக்கப்பட்டுள்ளவை - ஏன் போலியானவை என்றே கூறிட விரும்புகிறேன். எல்லாவற்றையும் விட, அவரது அறிக்கையானது அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தவும், அரசுப் பள்ளி மாணவ - மாணவிகளின் கல்வித் தரத்தை வலுப்படுத்தவும் தி.மு.க. அரசு கொண்டுள்ள தெளிவான உயரிய நோக்கத்தைக் கொச்சைப்படுத்துவதாகும். 
நம்ம ஸ்கூல் நம்ம ஊர்ப் பள்ளி தொடக்க விழாவிற்காக 3 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக் கூறுவது அபத்தமானது. இத்தொகை வரும் ஓராண்டு முழுவதற்கும் மாவட்ட ஆட்சியர்கள் நிறுவனங்களுடன் நடத்தவிருக்கும் கூட்டங்களுக்காகவும், ஊடகங்களில் செய்தியைக் கொண்டு சேர்ப்பதற்காகவும், விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காகவும், இத்திட்டத்தில் பங்களிப்பவர்களை ஒன்றுசேர்க்கவும், திட்டம் குறித்த ஒலித்துண்டுகளையும் காணொலிகளையும் உருவாக்குவதற்கும், பரப்புரைக்காகவும், தொடக்க விழாவுக்கு முன்பே நடந்த திட்டமிடல் கூட்டங்களுக்கும், தொடக்க விழாவுக்காகவும் சேர்த்து இந்த 3 கோடி ரூபாய் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

சமத்துவம், ஜனநாயகமான வழிமுறை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊர்ப் பள்ளியின் ஒட்டுமொத்த அணுகுமுறை. பொது மனசாட்சியைத் தட்டி எழுப்பி தரமான பள்ளிக் கல்வி குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி அவர்களைப் பள்ளிகளின்பால் அதிக உரிமை எடுக்கச் செய்வதற்கான ஒரு முயற்சி இது. பள்ளிகளை மேம்படுத்துவதற்கான ஆதரவையும் பங்களிப்பதற்கான அணிதிரட்டலையும் உருவாக்கும்பொருட்டு, மாவட்டம் வட்டாரம் ஊராட்சி அளவிலான பல்வேறு பரப்புரைகளின் விளைவாகக் கொண்டுவரப் பட்டதே இத்திட்டம். தொடக்க விழா நடந்த டிசம்பர் 19, 2022 அன்று மட்டும் 50.84 கோடி ரூபாய் அங்கு வருகை தந்திருந்த பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்களித்ததன் வழியாக ஒரே நாளில் திரட்டப்பட்டது என்பது இத்திட்டத்தின் மீதும் இந்த அரசின் மீதும் வைத்துள்ள நம்பிக்கைக்குச் சான்று.
எனவே இத்திட்டம் குறித்துச் சரியான புரிதல் இல்லாதவர்கள் சொல்லும் வதந்திகளை நம்பி, ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்காக அடிப்படை ஆதாரமற்ற - அபாண்டமான பொய் மூட்டைகளை அறிக்கையாக விடுவது துரதிர்ஷ்டவசமானது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு திராவிட மாடல் ஆட்சியில் வலுப்பட்டுவிடக் கூடாது, மாணவ - மாணவிகள் பயன்பெற்று விடக்கூடாது என்ற உள்நோக்கத்துடன், தி.மு.க. அரசின் புதிய திட்டத்திற்கு வரும் நன்கொடையாளர்களையும் தடுக்கும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி செயல்படுவது அவருக்கும் அழகல்ல; அவர் வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும் பொருத்தமல்ல! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com