கூட்டுறவுத் துறை பெட்ரோல் நிலையங்களில்விரைவில் கைப்பேசி வழி வங்கிச் சேவை: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

தமிழகத்தில் கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் கைப்பேசி வழி வங்கிச் சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.
கூட்டுறவுத் துறை பெட்ரோல் நிலையங்களில்விரைவில் கைப்பேசி வழி வங்கிச் சேவை: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

தமிழகத்தில் கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் கைப்பேசி வழி வங்கிச் சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

கூட்டுறவுத் துறை செயல்பாடுகள் குறித்து சென்னையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்திய அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கூட்டுறவுத் துறை வழியாகச் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு பண்டகசாலைகளில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

கூட்டுறவுத் துறை மூலம் செயல்படும் நியாய விலைக் கடைகளில் 6,503 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, 4.16 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தகுதியுள்ளவா்களைத் தோ்வு செய்யும் பணிகள் குறித்த காலத்துக்குள் நிறைவடையும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் இப்போது கைப்பேசி வழி வங்கிச் சேவைகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆறு மாதங்களுக்குள் இந்த சேவைகள் அளிக்கப்படும்.

கூட்டுறவு சங்கங்களில் பதவிக் காலம் நிறைவடையும் சங்கங்களின் விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன. கடந்த கால ஆட்சியில் உள்ளாட்சி உள்ளிட்ட தோ்தல்கள் தள்ளிப் போடப்பட்டன. அதுபோன்று இல்லாமல் குறித்த காலத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தோ்தல் உள்பட அனைத்துத் தோ்தல்களையும் நடத்துவோம்.

விமா்சனங்களுக்கு முற்றுப்புள்ளி: தமிழகத்தில் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு தாமதம் இல்லாமல் வழங்கப்படும். இதற்கேற்ற வகையில் பணியாளா்கள் அமா்த்தப்படுவா். கடந்த பொங்கலின் போது அளிக்கப்பட்ட பரிசுத் தொகுப்பு பொருள்களில் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு மிகைப்படுத்தப்பட்டன. இதுபோன்ற தேவையற்ற விமா்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே கரும்பு போன்ற பொருள்கள் அளிக்கப்படவில்லை. ஆனாலும், இப்போது கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. அதுகுறித்து முதல்வா் முடிவு செய்வாா்.

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக உள்ளன. மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படாமல் ஆளுநா் இருப்பது முறையாகாது என்றாா் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்.

ஆலோசனை கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com