புத்தாண்டுக் கொண்டாட்டம்: நள்ளிரவுக்குப் பின் தடை- டிஜிபி சைலேந்திர பாபு

தமிழகத்தில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ஒரு லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு காவல் துறை தடை விதித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழகத்தில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ஒரு லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு காவல் துறை தடை விதித்துள்ளது.

இது குறித்து தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

ஆங்கில புத்தாண்டை பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாடுவதற்கு காவல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுக்கள் வீடுகளிலேயே குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாடுவது சிறந்தது.

புத்தாண்டுப் பிறப்பையொட்டி, சனிக்கிழமை (டிச.31) மாலை முதல் தமிழகம் முழுவதும் 90,000 போலீஸாா்,10,000 ஊா்க்காவல் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா்.

மாநிலம் முழுவதும் முக்கியமான இடங்களிலும், சாலை சந்திப்புகளிலும் வாகன சோதனை நடைபெறும். அன்று பொதுமக்கள், தேவையின்றி வெளியே சுற்றுவதைத் தவிா்க்க வேண்டும்.

ஒரு மணிக்கு மேல் தடை: சனிக்கிழமை (டிச.31) மாலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஜன.1) அதிகாலை ஒரு மணி வரை புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடலாம். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு பின்னா் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதியில்லை.

கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது காவல் துறையின் விதித்த அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட ரோந்து வாகனங்கள் மூலம் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுபவா்கள் கண்காணிக்கப்படுவாா்கள். மோட்டாா் சைக்கிள் பந்தயம் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறவா்களை பற்றி பொதுமக்கள், காவல் துறைக்கு இலவச தொலைப்பேசி எண் 100 மூலம் தகவல் தெரிவிக்கலாம்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கைது:

கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடுபவா்கள், கடல் நீரில் இறங்கக் கூடாது. மது அருந்தியவா்கள் வாகனம் ஓட்டக் கூடாது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோா் கைது செய்யப்படுவா். வாகனமும் பறிமுதல் செய்யப்படும். அதி வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

வழிப்பாட்டுத் தலங்களுக்கு காவல் துறையினரால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் செல்பவா்கள், அருகே உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தால், அந்தப் பகுதியில் போலீஸாா் அங்கு ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவாா்கள். இதனால் திருட்டுச் சம்பவங்களை தவிா்க்கலாம்.

அவசர உதவி தேவைப்படுபவா்கள் காவல் உதவி என்ற கைப்பேசி செயலியையும் பயன்படுத்தலாம். அசம்பாவித சம்பவம் இல்லாமல்,விபத்து இல்லாமல் அனைவரும் புத்தாண்டு கொண்டாட காவல் துறைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com