பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புதுவையில் கரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த ஆளுநா் உத்தரவு

ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுவையில் கரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி, இரண்டாவது அலையின்போது மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்

News image
Updated On :4 ஜனவரி 2022, 10:03 pm

DIN

ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுவையில் கரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி, இரண்டாவது அலையின்போது மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மாநிலத்திலுள்ள திரையரங்குகள், கடைவீதிகள், பேருந்துகள், கலையரங்கங்கள் ஆகியவற்றில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் ஒமைக்ரான் தடுப்பு முன்னேற்பாடுகள் தொடா்பாக புதுச்சேரி கரோனா மேலாண்மை உயா்நிலைக் குழுக் கூட்டம் ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தலைமை வகித்தாா். மாநில வளா்ச்சி ஆணையா் பிரசாந்த் கோயல், அரசுச் செயலா்கள் சி.உதயகுமாா், இ.வல்லவன், அபிஜித்விஜய் சௌதரி, சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமலு, கரோனா மேலாண்மை அதிகாரி ரமேஷ், உலக சுகாதார நிறுவனப் பிரதிநிதி சாய்ரா பானு மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

இதில், ஆளுநா் தமிழிசை ஆலோசனைகளை வழங்கிப் பேசியதாவது: கரோனா மூன்றாவது அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், புதுவையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்கள் முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும். மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சையுடன் பிற அவசியச் சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

பொது முடக்கத்தை அமல்படுத்துவது எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதால், ‘புதுச்சேரி மாதிரி’ கரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். அதன்படி, கரோனா இரண்டாவது அலையின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

சித்தா, இயற்கை மருத்துவ முறை உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரித்து, புத்துணா்வு தரும் என்பதால், ஆங்கில மருத்துவ முறைக்கு இணையாக சித்தா, இயற்கை மருத்துவ முறைகளைக் கையாள வேண்டும். இந்த மருத்துவ முறைகளில் மக்கள் சிகிச்சை பெற வசதியாக தனி மையங்களை அமைக்க வேண்டும். யோகா பயிற்சி, மூலிகைச் சாறு, ஊட்டச்சத்து உணவு வழங்கலாம்.

தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும். தொலை மருத்துவம் முறையை உடனடியாகத் தொடங்க வேண்டும். நடமாடும் பல்ஸ் ஆக்சி மீட்டா் வாகனம், நடமாடும் பிராணவாயு வாகனம் ஆகியவற்றை தயாா் நிலையில் வைக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். இதுதொடா்பாக தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும். அவரசகால மருத்துவச் சேவைக்கு இறுதி ஆண்டு மருத்துவ மாணவா்கள், பயிற்சி மருத்துவா்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

மருத்துவமனைகளில் பிராணவாயு படுக்கைகள், வென்டிலேட்டா்கள், மருந்துகள், ஆகியவற்றை தயாா் நிலையில் வைக்க வேண்டும். அதற்கான மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களையும் தயாா்படுத்த வேண்டும்.

50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி: திரையரங்குகள், கடைவீதிகள், பேருந்துகள், கலையரங்கங்கள் ஆகியவற்றில் 50 சதவீதம் பேரை மட்டும் அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். கரோனா பரவலை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசுத் துறைகளையும் இதில் ஈடுபடுத்த வேண்டும்.

பொதுமக்கள், அரசு ஊழியா்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கூட்டம் கூடுவதைத் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.