திருச்சி: பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் காயமடைந்த மாட்டின் உரிமையாளர் பலி

மாட்டுப் பொங்கல் விழாவையொட்டி திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. 
பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் காயமடைந்த மாட்டின் உரிமையாளர் பலி
பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் காயமடைந்த மாட்டின் உரிமையாளர் பலி

திருச்சி அருகே பெரிய சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் மாட்டின் உரிமையாளர் மாடு முட்டியதில் பரிதாபமாக பலியானார்.

திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஸ்ரீ நற்கடல்குடி கருப்பணசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான அரசுக்கு வழிகாட்டுதலின்படி தொடங்கியது.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆட்சியர் சு. சிவராசு தலைமை வைத்தார். திருச்சி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், கோட்டாட்சியர் தவச்செல்வம், வட்டாட்சியர் செல்வ கணேஷ், பிடிஒக்கள் லலிதா, ஜான்கென்னடி ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பச்சை கொடியை அசைத்து ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 400 ஜல்லிக்கட்டு காளைகள் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் மாடுகளுக்கு கால்நடை மாவட்ட இணை இயக்குனர் எஸ்தர் ஷீலா தலைமையில் பரிசோதனைகளும் மாடுபிடி வீரர்களுக்கு திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனையும் சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு காளையை கொண்டு வந்தபொழுது ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளர் மீனாட்சி சுந்தரம் (30) என்பவர் மீது மாடு பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாடுபிடி வீரர்களை விட மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்களே அதிக காயம் அடைந்து வருகின்றனர்.  இந்நிலையில் 400க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக போட்டி துவங்குவதற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com