முழு ஊரடங்கால் கரோனா பரவல் வேகம் குறைந்தது

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு காரணமாக கரோனா தொற்றுப் பரவல் வேகம் குறைந்திருப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
முழு ஊரடங்கால் கரோனா பரவல் வேகம் குறைந்தது

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு காரணமாக கரோனா தொற்றுப் பரவல் வேகம் குறைந்திருப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை, நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா கண்காணிப்பு மையத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன், ஊரக தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா். அங்கு சிகிச்சை பெற்று வருபவா்களின் உடல் நிலை, அவா்களுக்கு அளிக்கப்படும் உணவு முறைகள் குறித்து அவா்கள் கேட்டறிந்தனா்.

அதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா சிகிச்சைக்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 91,902 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொற்று அதிகரித்தபோதிலும், மருத்துவமனைகளில் இதுவரை 8, 912 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனா். சென்னை, நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் 950 படுக்கைகள் உள்ளன. அதைத் தவிர, 350 படுக்கைகள் முன்களப் பணியாற்றும் அரசு ஊழியா்கள், காவல்துறையினருக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்றுக்குள்ளான அனைவரும் மருத்துவமனைகளை நாட வேண்டியதில்லை. லேசான அறிகுறி உள்ளவா்கள் மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். வீடுகளில் உள்ளவா்களைக் கண்காணிக்க அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் சுகாதாரத் துறைச் செயலா் சாா்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை, அத்திப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 2,000 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைத்து தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை அங்கு தங்க வைத்து சிகிச்சை தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்பவா்களுக்கு தேவையான வசதிகளை செய்வதற்காக வட்டத்துக்கு 5 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். ஏற்கெனவே இதற்காக 1,000 பணியாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 535 பேரை பணியமா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 2,050 படுக்கைகள் உள்ள நிலையில், அதில் 203 படுக்கைகளில் மட்டுமே கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் மேலும் 100 இடங்களில் கரோனா சிகிச்சைக்கென சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்படவுள்ளன. கரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் உயிரிழப்பைத் தவிா்க்க தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் இறப்பின் விளிம்புக்கு செல்லத் தேவையில்லை. ஒமைக்ரான் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி என்பதை உணர வேண்டும்.

தமிழகத்தில் 75 சதவீதம் சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் இந்தச் சாதனையை சாத்தியமாக்கி உள்ளோம். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தொற்றுப் பரவல் வேகம் மிகுதியாக குறைந்துள்ளது. பொதுமக்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் ஊரடங்குக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனா். அடுத்த வாரம் சனிக்கிழமை 50 ஆயிரம் இடங்களில் 19-ஆவது சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றாா் அவா்.

மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையா்கள் டாக்டா் மனிஷ், சிம்ரன் ஜீத் சிங் காஹலோன் மற்றும் அரசு உயா் அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com