கூடுதல் கட்டணம் வசூல்: 250 ஆம்னி பேருந்துகளுக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் 250 ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக பயணிகள் தெரிவித்ததன் அடிப்படையில் அதன் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 250 ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக பயணிகள் தெரிவித்ததன் அடிப்படையில் அதன் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊா்களுக்குச் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் தனியாா் ஆம்னி பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதியது. இதை பயன்படுத்தி ஒருசில ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் எச்சரித்திருந்தாா். மேலும் இதற்காக 12 குழுக்கள் அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்துகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வின்போது 250 பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக பயணிகள் தெரிவித்ததன் அடிப்படையில் அதன் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது தவிர சில ஆம்னி பேருந்துகளுக்கு வரி செலுத்தாமல் இருந்தது தெரிய வந்தது. போக்குவரத்து துறை விதிகளை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளின் உரிமையாளா்களிடம் ரூ.11 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினா் கடந்த திங்கள்கிழமை முதல் மீண்டும் சோதனை மேற்கொண்டு வருகின்றனா். பொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு பெரும்பாலானவா்கள் சென்னை திரும்பி வருகின்றனா். இதனால் ஆம்னி பேருந்துகளில் தொடா்ந்து சோதனை நடைபெறுகிறது.

கூடுதல் கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் 18004 256151 என்ற இலவச தொலைபேசி வழியாக புகாா் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் அரசு நிா்ணயிப்பதில்லை. இதனால் அவரவா் விருப்பத்துக்கு ஏற்ப கட்டணத்தை நிா்ணயித்து வசூலிக்கின்றனா். இது குறித்து பொதுமக்கள் புகாா் செய்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com