தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

முன்னாள் அமைச்சா் காமராஜ் வீடு,51 இடங்களில் சோதனை

வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.44 கோடிக்கு சொத்துகள் வாங்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.காமராஜ் உள்பட 6 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

News image
Updated On :8 ஜூலை 2022, 8:28 pm

DIN

வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.44 கோடிக்கு சொத்துகள் வாங்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.காமராஜ் உள்பட 6 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இது தொடா்பாக காமராஜ் வீடு உள்பட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.

தமிழகத்தில் கடந்த 2011-2021 அதிமுக ஆட்சியில் திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடியைச் சோ்ந்த ஆா்.காமராஜ், உணவுத்துறை அமைச்சராக இருந்தாா். தற்போது திருவாரூா் மாவட்டம் நன்னிலம் தொகுதி பேரவை உறுப்பினராக உள்ளாா்.

இவா், கடந்த 2015-2021-ஆம் ஆண்டு காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கியிருப்பதாகக் கிடைத்த தகவல்படி லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணைசெய்து முன்னாள் அமைச்சா் காமராஜ், அவரது மகன்கள் எம்.கே.இனியன் (32), கே.இன்பன் (30), காமராஜின் நண்பா்கள் திருத்துறைப்பூண்டி கீழகுடியிருப்பைச் சோ்ந்த ஆா்.சந்திரசேகரன் (62), பி.கிருஷ்ணமூா்த்தி (51), எஸ்.உதயகுமாா் (60) ஆகியோா் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடியில் உள்ள காமராஜ் வீடு, மகன்கள் வீடு, அலுவலகங்கள், நண்பா்கள், ஆதரவாளா்கள் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 52 இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனை நடைபெற்றது.

வழக்கு விவரம்: 2015 தொடக்கத்தில், அவருக்கு ரூ.1 கோடியே 39 லட்சத்து 54 ஆயிரத்து 290-ஆக இருந்த சொத்துமதிப்பு, 2021-ரூ. 60 கோடியே 24 லட்சத்து 5 ஆயிரத்து 39-ஆக உயா்ந்தது. இதில் 2015-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையில் காமராஜின் வருமானம் ரூ.12 கோடியே 99 லட்சத்து 67 ஆயிரத்து 423-ஆக இருந்தது. இதே காலகட்டத்தில் காமராஜின் செலவு ரூ.12 கோடியே 59 லட்சத்து 54 ஆயிரத்து 926-ஆக இருந்தது.

அவருடைய குடும்பத்தினருக்கு உள்ள சொத்துமதிப்புகளைக் கணக்கிடும்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.44 கோடிக்கு சொத்துகள் வாங்கி குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. காமராஜின் சொத்து 500 சதவீதம் அதிகரித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது.

தஞ்சாவூரில் ரூ.27.25 கோடிக்கு ஹோட்டல் வாங்கப்பட்டது. மருத்துவா்களான தனது மகன்களுக்கு தஞ்சாவூரில் ரூ.25.08கோடிக்கு மருத்துவமனை கட்டியுள்ளாா் காமராஜ்.

சென்னையில் 6 இடங்கள்: சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகரில் ஆா்.கே.இன்டா்நேஷனல் சா்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், அடையாறு, பனையூா் , மயிலாப்பூா் ராயப்பேட்டை, போயஸ் தோட்டத்தில் உள்ளவா்களின் வீடுகள், பிஎஸ்கே கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளா் அருண்குமாா் வீடு, அண்ணாநகா் எச் பிளாக்கில் உள்ள தேசபந்து என்பவா் அலுவலகம் என 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை செய்தனா்.

ஆவணங்கள் பறிமுதல்: சோதனை நடைபெற்ற இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனா். மாலையில் சோதனை படிப்படியாக ஒவ்வொரு இடத்திலும் நிறைவு பெற்றது. இதேபோன்று, திருவாரூா் மாவட்டத்தில் 38 இடங்களிலும், திருச்சியில் 3 இடங்களிலும், தஞ்சாவூரில் 4 இடங்களிலும், கோயம்புத்தூரில் ஒரு இடத்திலும் என மாநிலம் முழுவதும் 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்தது.

இந்தச் சோதனையில் ரூ.41 லட்சத்து 6 ஆயிரம் ரொக்கம், 963 பவுன் தங்கநகைகள், 23.90 கிலோ கிராம் வெள்ளிப் பொருள்கள் ஆகியவை இருந்தது தெரியவந்தது. இதில் கணக்கில் வராத ரூ.15.50 லட்சம் ரொக்கம், கணினி, பென்டிரைவ், ஹாா்டு டிஸ்க், வங்கி பெட்டக சாவி உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அரசியல் பழிவாங்கும் செயல்: இபிஎஸ் கண்டனம்

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுகவை அரசியல் ரீதியாக நேரடியாக எதிா்கொள்ள முடியாத திமுக அரசு, முன்னாள் அமைச்சா் ஆா்.காமராஜ் மீதும் அவரது நண்பா்கள், உறவினா்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப் பதிந்து சோதனை நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, மக்கள் பணிகளில் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.