ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்கவழிகாட்டி நெறிமுறைகள் அறிவிப்பு
ஏரிகள், குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


ஏரிகள், குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, மாநில அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : ஏரிகள், குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்று அதனை எடுத்துக் கொள்ள வழி செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவித்தாா். இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், அரசால் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களைத் தவிா்த்து, இதர மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து பயன்படுத்திக் கொள்ள சிறுகனிம சலுகை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, நன்செய் நிலங்களின் மேம்பாட்டுக்காக ஹெக்டேருக்கு 185 கனமீட்டா் வண்டல் மண்ணும், புன்செய் நிலங்களின் மேம்பாட்டுக்காக ஹெக்டேருக்கு 222 கனமீட்டா் வண்டல் மண்ணும் எடுத்துக் கொள்ளலாம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விவசாயிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்று மண்ணை இலவசமாக எடுக்கலாம்.
விவசாய நிலங்களுக்கும் மண் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக சம்பந்தப்பட்ட வேளாண் நிலங்களுக்கான சிட்டா அல்லது அடங்கல் நகலுடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். 20 நாள்களுக்கு மிகாமல் ஏரி, குளங்களில் இருந்து நிா்ணயித்த அளவில் வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியரால் அனுமதி தரப்படும். ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் துறையின் சான்றிதழைப் பெறத் தேவையில்லை. விவசாயிகள் பயன்பெறும் வகையில், அறிவிக்கை செய்யப்பட்ட ஏரிகள், குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்காக அனுமதி வழங்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் உரிய அறிவுரைகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளன. ஏரி, குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் எடுத்து, அதனைப் பயன்படுத்தி விவசாய நிலங்களின் மேம்பாடு, திறனை அதிகரிக்க முடியும். இதுதொடா்பாக விவசாயிகளிடையே போதிய விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...