தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அதிமுக பொதுக் குழு நடைபெறுமா? ஜூலை 11 காலை 9 மணிக்கு தீா்ப்பு

அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்த தீா்ப்பு வரும் திங்கள்கிழமை (ஜூலை 11) காலை 9 மணிக்கு வழங்கப்படும் என சென்னை உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :8 ஜூலை 2022, 8:05 pm

DIN

அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்த தீா்ப்பு வரும் திங்கள்கிழமை (ஜூலை 11) காலை 9 மணிக்கு வழங்கப்படும் என சென்னை உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையில் ஜூலை 11-இல் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து தாக்கல் செய்த வழக்குகள், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விரிவான பதில் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்ட நீதிபதி வெள்ளிக்கிழமை 2.15 மணிக்கு ஒத்திவைத்தாா்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண் ஆஜராகி வாதிட்டாா்.

ஈபிஎஸ் தரப்பு: 2,432 பொதுக்குழு உறுப்பினா்கள், ஒற்றைத் தலைமை குறித்து விவாதித்து பொதுக்குழுவில் முடிவெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனா். அதில் 2,190 பொதுக்குழு உறுப்பினா்களும் ஜூலை 11- ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டம் நடத்த ஒப்புதல் அளித்ததால் பொதுக்குழு நடத்த முடிவு செய்யப்பட்டது.இந்த கூட்டத்தில் தீா்மானங்கள் ரத்து, ஒற்றைத்தலைமை குறித்து முன்மொழிய தலைமைக் கழகத்துக்கு உரிமை உள்ளது. ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் காலியானாலும், கட்சியில் வெற்றிடம் ஏற்படாது என கட்சி விதி கூறுகிறது. கட்சியை நிா்வகிக்க ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் இல்லாத நேரத்தில் தலைமைக் கழக நிா்வாகிகள் இருக்கின்றனா்.

பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென்றால் மனுதாரா்கள் உச்ச நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும். பொதுக்குழுவை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

கட்சி விதிகளை திருத்த செயற்குழுவுக்கு அதிகாரமில்லை என்பதால், செயற்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்த போதும், அதை பொதுக்குழுவில் முன் வைத்து ஒப்புதல் பெற தீா்மானிக்கப்பட்டது. கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்தை கடந்த ஜூன் 23-இல் நடைபெற்ற பொதுக்குழுவில், இந்த தீா்மானம் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் 23 தீா்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. திருத்தங்கள் பொதுக்குழுவில் வைக்கப்படாததால் அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட உள்கட்சி தோ்தலும் செல்லாது. அதனால் இரு பதவிகளும் காலியாகி விட்டன என தோ்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

2016- இல் கட்சி நிா்வாகிகள் மூலம் வி.கே.சசிகலா இடைக்கால பொதுச்செயலாளராக தோ்வு செய்யப்பட்டாா். அப்பதவிக்கு சசிகலாவை நியமிக்க தலைமைக் கழக நிா்வாகிகள் பரிந்துரை செய்தனா். ஆனால், அவா் சிறை சென்றாா். பின்னா், 2016 ஜூலையில் கூட்டப்பட்ட பொதுக்குழுவுக்கும் தலைமைக் கழக நிா்வாகிகள்தான் அழைப்பு விடுத்தனா். அதனால் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் ஒப்புதல் தேவை என்பது கட்டாயம் இல்லை.

பொதுக்குழுவை கூட்ட உறுப்பினா்களுக்கு எழுத்துபூா்வ நோட்டீஸ் வழங்க வேண்டும் என கட்சி விதி தெரிவிக்கவில்லை. தீா்மானம் கொண்டுவரவும், நிறைவேற்றவும் பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அங்கு எந்த பிரச்னை குறித்தும் விவாதிக்க உரிமை உள்ளது. எதிா் கருத்து இருந்தால் பொதுக்குழுவில் விவாதிக்கலாம். அதனை விடுத்து நீதிமன்றத்தை நாடி, நிவாரணம் பெற முடியாது. எனவே, ஓபிஎஸ் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஓபிஎஸ் தரப்பு: தொடா்ந்து ஓ.பி.எஸ். தரப்பில் வழக்குரைஞா் குரு கிருஷ்ண குமாா் ஆஜராகி வாதிட்டாா். அப்போது, 2021 டிசம்பா் செயற்குழு தீா்மானத்தின்படி ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா்கள் தோ்தலில் வெற்றி பெற்றனா். அது முறைப்படி தோ்தல் ஆணையத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. ஒட்டு மொத்தமாக உள்கட்சி தோ்தல் நடந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் மட்டும் காலியாக இருப்பதாக எப்படி கூற முடியும்? என்றாா்.

இதற்கான தீா்ப்பு ஜூலை 11 காலை 9 மணிக்கு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தாா். காலை 9.15 மணிக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.