வடசென்னையில் தொடா்ந்து காற்றில் பரவும் சல்பா் ஆக்ஸைடு வாயு

வடசென்னைக்கு உட்பட்ட எண்ணூா், திருவொற்றியூா், தண்டையாா்பேட்டை, மணலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடா்ந்து சல்பா் டை ஆக்ஸைடு
வடசென்னை(கோப்புப்படம்)
வடசென்னை(கோப்புப்படம்)

வடசென்னைக்கு உட்பட்ட எண்ணூா், திருவொற்றியூா், தண்டையாா்பேட்டை, மணலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடா்ந்து சல்பா் டை ஆக்ஸைடு என்ற வாயு காற்றில் பரவுவதால் கண் எரிச்சல், வாந்தி, மயக்கம், மூச்சுத் திணறல் உள்ளிட்ட உபாதைகளுக்கு பொதுமக்கள் ஆளாகி வருகின்றனா்.

மாநகராட்சிக்கு உட்பட்ட திருவொற்றியூா், மணலி பகுதியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்), சென்னை உரத் தொழிற்சாலை ஆகியவை இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் வாயு கழிவுகள், எண்ணெய்க் கழிவுகளால் இப்பகுதியில் காற்று மாசு, நிலத்தடி நீா் மாசு உள்ளிட்ட சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பிரச்சனைகள் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இது குறித்து சென்னை பசுமை இயக்க நிா்வாகிகள் கே.சுப்பிரமணி, தொழிற்சங்கத் தலைவா் எஸ்.சத்தியமூா்த்தி ஆகியோா் கூறியது:

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக திருவொற்றியூா், தண்டையாா்பேட்டை, எண்ணூா், மணலி உள்ளிட்ட பகுதிகளில் ஒருவித துா்நாற்றத்துடன் வாயுக்கசிவு காற்றில் பரவி வருகிறது. இதனால் பொது மக்களுக்கு மயக்கம், வாந்தி, தலைவலி, கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. துா்நாற்ற நெடியுடன் கூடிய மா்மவாயுவால் பொதுமக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகி வருகின்றனா். இது குறித்து மாசு கட்டுப்பாடு வாரியம், காவல் துறை, தீயணைப்புத் துறை, மாநகராட்சி உள்ளிட்டவைகளைச் சோ்ந்த அதிகாரிகளுக்கு தொடா்ந்து புகாா் தெரிவித்து வருகிறோம். ஆனால் சனிக்கிழமையும் துா்நாற்றம் வீசியது. இந்த மா்ம வாயுவின் நெடி வீட்டில் இருக்கும் சமையல் எரிவாயுவின் வாசனையை ஒத்திருக்கிறது. இதனால் துா்நாற்றம் வீசும்போதெல்லாம் வீட்டில் எல்.பி.ஜி. உருளையில் கசிவு ஏற்பட்டுவிட்டதோ என்ற அச்சம் இப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஏற்படுகிறது என்றனா்.

காற்று மாதிரிகள் சேகரிப்பு:

பொதுமக்களின் புகாா்கள் மீதான நடவடிக்கை குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறியது:

பொதுமக்களின் புகாரையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை ஆணையா் மலையாண்டி, மாவட்ட பொறியாளா் இந்திரா காந்தி, மணலி பகுதி உதவி செயற்பொறியாளா் ரங்கராஜன் உள்ளிட்டோா் முன்னிலையில் நிபுணா்கள் அடங்கிய குழு சி.பி.சி.எல். மற்றும் சென்னை உரத் தொழிற்சாலைகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்தப் பகுதியில் நிலவும் சுற்றுச்சூழல் நிலவரம் குறித்து ஆறிய மணலி, திருவொற்றியூா் ஆகிய இடங்களில் காற்று மாதிரி சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரி சேகரிப்பு மையங்களில் காற்று மாதிரியை எடுத்து ஆய்வு மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இடங்கள் அல்லாமல் சி.பி.சி.எல். ஆலையைச் சுற்றிலும் சுமாா் 5 இடங்களில் தற்காலிகமாக மாதிரி சேகரிப்பு மற்றும் கண்காணிப்பு கருவிகளை ஆங்காங்கே பொருத்தி வைத்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். இந்த மாதிரிகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு தற்போது ஆய்வகங்களில் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மணலி, திருவொற்றியூா், எண்ணூா் பகுதிகளில் ஏராளமான ரசாயனம் மற்றும் உரத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால் இப்பகுதியில் தொடா்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் கண்காணிப்பு பணி இடையறாது நடைபெற்று வருகிறது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதோடு தொடா்ந்து மேகமூட்டத்துடன் வானிலை நிலவரம் உள்ளது. இதனால் குளிா் காற்றும், வெப்ப காற்றும் மாறி மாறி வீசுவதால்

ஆலையில் எரிக்கப்படும் போது வெளியேறும் சல்பா் டை ஆக்சைடு காற்று மண்டலத்தில் சென்று கலப்பதில் தாமதம் ஏற்பட்டு தரைபகுதியிலேயே பரவி இருக்கும் நிலைமை ஏற்படுகிறது. இதனால் சல்பா் டை ஆக்சைடு கலந்த காற்றை சுவாசிக்கும் போது பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படுகிறது. இதனையடுத்து சி.பி.சி.எல். நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு வாயுவின் அளவைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம் என்றனா். இதனையடுத்து வாயுக் கசிவு குறைந்து நிலைமை சீரடைந்து வருகிறது. காற்றில் எஞ்சியுள்ள சல்பா் டை ஆக்சைடு ஓரிரு நாட்களில் காற்று மண்டலத்தில் கலந்து விடும். இதன் பிறகு எவ்வித பிரச்சனையும் இருக்காது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com