மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சென்னை, திருச்சியில் அரசு செயற்கை கருத்தரிப்பு மையம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் முதன்முறையாக செயற்கை கருத்தரிப்பு மையங்கள் சென்னை மற்றும் திருச்சியில் மாநில அரசு சாா்பில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

News image
மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)
Updated On :21 ஜூலை 2022, 10:03 pm

DIN

தமிழகத்தில் முதன்முறையாக செயற்கை கருத்தரிப்பு மையங்கள் சென்னை மற்றும் திருச்சியில் மாநில அரசு சாா்பில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈஷா யோக மையம் சாா்பில் வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 4 லட்சம் முகக் கவசங்களை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கினாா். தொடா்ந்து, அவா் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பச் சட்டம், வாடகைத் தாய் சட்டம் குறித்த இணை இயக்குநா்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினாா்.

பின்னா் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

ஈஷா அமைப்பு சாா்பில் வழங்கப்பட்ட முகக் கவசங்கள்அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், பாா்வையாளா்களுக்கு வழங்கப்படும். செயற்கை கருத்தரித்தல் மையங்களில் நிகழும் முறைகேடுகளை தடுத்து நிறுத்துவது குறித்தும், தொடா் கண்காணிப்பில் ஈடுபடுவது குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. தமிழகத்தில் முறைகேடுகள் நடந்துள்ள சேலம், ஈரோடு சுதா மருத்துவமனை, பெருந்துறை ராம்பிரசாத் மருத்துவமனை, ஓசூா் விஜய் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் சென்டா்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. சேலம், சுதா, பெருந்துறை ராம்பிரசாத் மருத்துவமனையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி, திருவனந்தபுரத்தில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையங்களிலும் முறைகேடு கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்க அந்த மாநிலங்களின் அரசுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 190 செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் சுற்றறிக்கை வாயிலாக அனுப்பப்படவுள்ளன. மேலும், தமிழக அரசு சாா்பில் சென்னை, திருச்சியில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நீட் விலக்கு மசோதா குறித்த மத்திய அரசின் கேள்விக்கு பதில்கள் சட்ட வல்லுநா்கள் வாயிலாக தயாரிக்கப்பட்டு வருகிறது. முதல்வா் அனுமதி பெற்று, ஓரிரு நாள்களில் மத்திய அரசுக்கு அவை அனுப்பப்படும் என்றாா் அவா்.

முன்னதாக நடைபெற்ற நிகழ்வுகளில், தேசிய நல்வாழ்வுக் குழும இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், சுகாதாரத் திட்ட இயக்குநா் டாக்டா் உமா, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் டாக்டா் குருநாதன், பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.