திருப்புவனத்தில் வைகை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க அடிக்கல், ஆவின் விற்பனையகம் திறப்பு விழா

திருப்புவனத்தில் வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா மற்றும் ஆவின் விற்பனையகம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
லாடனேந்தலில் ஆவின் விற்பனையகம் திறப்பு விழாவில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் வட்டி இல்லா கடன் வழங்கிய அமைச்சர் பெரியகருப்பன். 
லாடனேந்தலில் ஆவின் விற்பனையகம் திறப்பு விழாவில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் வட்டி இல்லா கடன் வழங்கிய அமைச்சர் பெரியகருப்பன். 

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா மற்றும் ஆவின் விற்பனையகம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்புவனம் ஒன்றியம் லாடனேந்தலீ-பெத்தானேந்தல் ஆகிய ஊர்களை இணைக்கும் வகையில்  வைகை ஆற்றின் குறுக்கே ரூ. 15 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி தலைமை தாங்கினார்.

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் விழாவில் பங்கேற்று பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார். விழாவில் மாவட்ட ஆட்சியர் மது சூதன்ரெட்டி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அதன்பின் திருப்புவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் லாடனேந்தலில் ஆவின் விற்பனையகம் திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் பெரியகருப்பன் விழாவில் பங்கேற்று ஆவின் விற்பனையகத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

பின்னர் பால் உற்பத்தியாளர்களுக்கு வட்டி இல்லா கடன் மற்றும் ஊக்கத் தொகைகளை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கி பேசியதாவது: தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான பாலங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது திருப்புவனம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள லாடனேந்தல்-பெத்தானேந்தல் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு இந்த திட்டப் பணிகள் 18 மாத காலத்திற்குள் நிறைவேற்றப்படும்.

சிவகங்கை மாவட்டத்திலேயே திருப்புவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் அதிக அளவில் பால் உற்பத்தி செய்து சாதனை படைத்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறும் என்றார்.

இவ்விழாவில் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி திருப்புவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சேங்கைமாறன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி,மானாமதுரை நகர்மன்றத்  தலைவர் மாரியப்பன் கென்னடி,திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சின்னையா  மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com