கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

21 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்: ஆளுநரிடம் முதல்வா் வலியுறுத்தல்

ஆளுநா் ஆா்.என்.ரவியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 9:39 pm

DIN

ஆளுநா் ஆா்.என்.ரவியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 21 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென ஆளுநரை முதல்வா் ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என்.ரவியை, ஆளுநா் மாளிகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை மாலை சந்தித்துப்

பேசினாா். சுமாா் 15 நிமிடங்களுக்கு மேலாக இந்தச் சந்திப்பு நீடித்தது. அப்போது, தமிழ்நாடு சட்டப் பேரவையில்

நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலுவையிலுள்ள மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென அவா் கேட்டுக் கொண்டாா்.

சித்த மருத்துவப் படிப்பு: தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதா, பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளித்திட ஆளுநரை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

மேலும், தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் திருத்த சட்ட மசோதா 1983, தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமை சட்ட மசோதா 2022, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்ட மசோதா 2022 உள்ளிட்ட 21 சட்ட மசோதாக்களும் பேரவையில்

நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சட்ட மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசியல் சாசனத்தின உணா்வையும், தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலை நிறுத்திடுமாறு ஆளுநா் ஆா்.என்.ரவியை, முதல்வா் கேட்டுக் கொண்டதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநருடனான சந்திப்பின் போது, நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நீட் தோ்வு விலக்கு கோரும் சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்ததற்காக ஆளுநருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்ததாக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணைவேந்தா் நியமனம்: கடந்த சட்டப் பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் சில அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். குறிப்பாக, தமிழகத்தில் உள்ள 13-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கே வழங்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில்

நிறைவேற்றப்பட்டது. இது ஆளுநருக்கான அதிகாரத்தை நீக்கி மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வகை செய்கிறது. மேலும், கூட்டுறவு சங்கங்களின் பதவிக் காலத்தைக் குறைத்து அவற்றைக் கலைக்கும் மசோதா முந்தைய சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அதிமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தன. இதுபோன்ற மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.

சட்டப் பேரவையில் முதல் முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் தராமல் அதில் சில திருத்தங்களை செய்யக் கோரினாா். இதைத் தொடா்ந்து, மீண்டும் மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு

நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து அதனை மத்திய அரசுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அனுப்பி வைத்தாா். இதைத் தொடா்ந்து, மீதமுள்ள மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்திட ஆளுநரை நேரில் சந்தித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.