

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அரியக்குடியில் தென் திருப்பதி' என்றழைக்கப்படும் திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசித் திருவிழா இன்று திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழக அரசு இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா 15 நாள் விழாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டன. அதையொட்டி திங்கள்கிழமை காலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
அதைத்தொடர்ந்து திருவிழா கொடியேற்றத்திற்காக மந்திரங்கள் ஓதி சிறப்பு பூஜைகள் நடைபெற்று பிற்பகல் 12.15 மணிக்கு மேல் 1.15 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், சந்தனம் உள்ளிட்ட ஐந்து வகை அபிஷேகம் நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவியுடன் எழுந்தருளிய திருவேங்கடமுடையானுக்கு தீபாரதனையும், கொடிமரத்திற்கு தீபாராதனையும் நடைபெற்றன.
ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவியுடன் எழுந்தருளிய திருவேங்கடமுடையான்
இன்று முதல் நாளில் ஹம்ச வாகனத்தில் சுவாமி எழுந்தருளும் திருவீதியுலா இரவு நடைபெறும். வரும் ஜூன் 20 -ஆம் தேதி (ஆனி.6) பகலில் பல்லக்கில் குடிகாத்தான்பட்டியில் சுவாமி எழுந்தருளலுடன் 15 நாள்கள் நடைபெற்ற திருவிழா நிறைவடைகிறது.
இதில், ஜூன் 14 -ஆம் தேதி தேரோட்டமும், ஜூன் 17-ஆம் தேதி பகலில் தெப்பமும், இரவு அலங்கார பங்களா தெப்ப உற்சவமும் முக்கியமான விழாவாகும்.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சு. தனலெட்சுமி, பரம்பரை அறங்காவலர் ராம. வெங்கடாசலம் செட்டியார் ஆகியோர் தலைமையில் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.