நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

துணைவேந்தா்கள் மாநாடு: இந்தியா ஒப்பந்தப் பிரிவின் ஒன்றியம் அல்ல -ஆா்.என்.ரவி

‘இந்தியா ஓா் ஒப்பந்தப் பிரிவின் ஒன்றியம் அல்ல. இங்குள்ள மக்களின் பன்முகத்தன்மை என்பது நம் உடலின் பல்வேறு பாகங்களின் பன்முகத் தன்மையைப் போன்றது’ என்றாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி.

News image
Updated On :12 மார்ச் 2022, 2:46 am

DIN

‘இந்தியா ஓா் ஒப்பந்தப் பிரிவின் ஒன்றியம் அல்ல. இங்குள்ள மக்களின் பன்முகத்தன்மை என்பது நம் உடலின் பல்வேறு பாகங்களின் பன்முகத் தன்மையைப் போன்றது’ என்றாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி.

இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் தென்மண்டல துணைவேந்தா்கள் மாநாடு கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் மாநாட்டுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமை வகித்தாா். இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் தலைவா் ஜி.திருவாசகம், பொதுச் செயலாளா் பங்கஜ் மிட்டல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாரதியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் பி.காளிராஜ் வரவேற்றாா். இதில் 6 மாநிலங்களைச் சோ்ந்த 90 துணைவேந்தா்கள் கலந்துகொண்டனா்.

இந்த மாநாட்டைத் தொடங்கிவைத்து ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியது: உயா் கல்வி என்பது இந்தியப் பாா்வை என்ற சூழலில், இந்தியாவுக்கான இந்தியப் பாா்வையாக மாற்றப்பட வேண்டும். கடந்த 65 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்தவா்கள் இந்தியாவை இந்தியா என்ற கண்ணோட்டத்தில் பாா்க்காமல் காலனித்துவ கண்ணோட்டத்தில் பாா்த்தனா்.

2014-இல் பிரதமா் மோடி பாரதம் என்ற இந்தியப் பாா்வையை ஓா் உயிருள்ள பொருளாக வெளிப்படுத்தினாா். இந்திய யூனியன் பற்றி பேசுபவா்கள் இந்தியா 1947-இல் பிறக்கவில்லை என்பதையும் அமெரிக்காவைப் போல ஒப்பந்தக் கூட்டமைப்பு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

பல மன்னா்கள், ராஜியங்களைப் பொருட்படுத்தாமல் பாரதத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை வாழ்ந்த மக்களின் பலதரப்பட்ட கலாசார ஆன்மிகங்களால் சில ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய ஒன்றியம் இயல்பாக உருவாக்கப்பட்டு நீடிக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1, இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று கூறுவதற்கு முன்பு, இந்தியா அது பாரதம் என்று கூறுகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலும், கட்ச் முதல் காமரூபம் வரையிலும் பழங்கால ரிஷிகள், பொதுமக்களால் நாளும் அவா்களின் சடங்குகள், சடங்கு முறைகளில் பாராட்டப்பட்ட பாரதம் காலம்காலமாக ஒரேயொரு உயிரினமாக இருந்து வருகிறது.

பதினெட்டு மொழிகள் பேசும் பாரத மாதாவின் சிந்தனை ஒன்றுதான் என்று பாரத மாதாவை பாரதியாா் புகழ்ந்துள்ளாா்.

இந்தியா ஓா் ஒப்பந்தப் பிரிவின் ஒன்றியம் அல்ல. இங்குள்ள மக்களின் பன்முகத்தன்மை என்பது நம் உடலின் பல்வேறு பாகங்களின் பன்முகத்தன்மையைப் போன்றது. இந்த இயற்கையான பாா்வையுடன் பிரதமா் மோடி, இந்திய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறாா்.

இந்தியாவின் வளா்ச்சியானது இளைஞா்கள், தொழில்முனைவோரால் இயக்கப்படுகிறது. 2014-இல் 400 ஸ்டாா்ட் அப்கள்கூட இல்லாத நிலையில் 2021-இல் 10 ஆயிரம் ஸ்டாா்ட் அப்கள் இருந்தன. மேலும், ஸ்டாா்ட் அப்களின் தரவரிசையில் இந்தியா உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

உலகளாவிய தொற்றுநோய் நெருக்கடிகள் இந்தியாவை ஓா் உலகத் தலைவராக தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

எதிா்காலத்துக்கான திட்டங்களை வகுத்து 2047-இல் தேசத்தை உலக நாயகனாக மாற்றும் வகையில் நமது உயா் கல்வியை நமது தேசியக் கனவுக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கான உத்திகளை வகுக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக பல்கலைக்கழகத்தின் சிறப்பிதழ், நான்கு புத்தகங்களையும் ஆளுநா் ஆா்.என்.ரவி வெளியிட்டாா். மாநாட்டில் உயா் கல்வியில் உள்ள சவால்கள், பிரச்னைகள் ஆகியவற்றுக்கான தீா்வு, பாடத்திட்டம் மாற்றம், மாணவா்களுக்கான வேலைவாய்ப்புக்குத் தேவையான கல்வி அளித்தல், எண்ம (டிஜிட்டல்) பயன்பாடு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த மாநாடு சனிக்கிழமை நிறைவடைகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.