திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்
திருவாரூா் தியாகராஜசுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. ஆரூரா, தியாகேசா என்ற கோஷங்கள் முழங்க, பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.


திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு ஆழித்தேரோட்டம், ஆரூரா, தியாகேசா பக்தி கோஷங்கள் முழங்க செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டது.
நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ள திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே 2 ஆவது பெரிய தேர் எனும் சிறப்புக்குரியது. இந்த தேரானது, 96 அடி உயரமும், 360 டன் எடையையும் உடையது. இந்த தேரில் 63 நாயன்மார்களின் புராணச் சிற்பங்கள், பெரிய புராணம், சிவபுராண காட்சிகள் உள்ளிட்டவை, மரச்சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

சிறப்பு மிக்க தேரோட்டம்...
திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி இந்த ஆழித்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது. கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தேரோட்டம் நடைபெற்று வருகிறது என்பதை திருநாவுக்கரசரின் தேவாரப் பதிகம் மூலம் அறிய முடிகிறது. 1748 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆழித்தேரோட்டம் குறித்து தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், 1765 இல் தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா, ஆழித் தேரோட்டத்தில் பங்கேற்றது தொடர்பான குறிப்புகளும் உள்ளன.
தஞ்சை அரண்மனை சரஸ்வதி மஹாலில் உள்ள மராட்டிய மன்னர் காலத்து ஆவணம் ஒன்றில், திருவாரூர் தியாகராஜ சுவாமி பங்குனி ரதோஸ்தவம், மாசி மாதம் 8 ஆம் தேதி முதல் சித்திரை இரண்டாம் தேதி வரையிலும் 55 நாள் உத்சவ விவரங்கள் என 1843 இல் நடைபெற்ற பங்குனி உத்சவ விழா பற்றி தெரிவிக்கிறது.
பங்குனி ஆயில்யத்தில் ஓடிய ஆழித்தேர்...
அஸ்த நட்சத்திரத்தில் துவஹாரோஹணம் எனும் கொடியேற்றி, பூசத்தில் தேருக்குச் சென்று, ஆயில்ய நாளில் தேராட்டம் நிகழ்த்தி, உத்திரத்தில் தீர்த்தம் அருளி, உத்திராடத்தில் விழா பூர்த்தி என்பது திருவாரூர் பங்குனித் திருவிழா குறித்த சொல்மொழி ஆகும். இது 36 நாள் திருவிழாவாகும். இதுதவிர, விழா தொடக்கத்துக்கு முன்பு பூர்வாங்கம் ஒரு நாள், ஐயனார் திருவிழா 5 நாள், மீண்டும் பூர்வாங்கம் ஒருநாள், பிடாரி திருவிழா 10 நாள், பூர்வாங்கம் 2 நாள் என கொண்டாடப்பட்டு அதன்பிறகு பங்குனிப் பெருவிழா 36 நாள்கள் என மொத்தம் 55 நாள்கள் விழா நடைபெற்றுள்ளது.

நிகழாண்டு திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவுக்காக பிப்.20 ஆம் தேதி கொடியேற்றப்பட்டது. அப்போது, ஆகமவிதிகளின்படி, பங்குனி ஆயில்ய நட்சத்தில் மார்ச் 15 ஆம் தேதி ஆழித்தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
_.jpeg)
தேரில் தியாகராஜர்...
இதைத்தொடர்ந்து, தினசரி இரவு வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா காட்சிகள் நடைபெற்றன. திங்கள்கிழமை இரவு, யதாஸ்தானத்திலிருந்து தியாகராஜர் புறப்பட்டு, விட்டவாசல் வழியாக அஜபா நடனத்துடன், சிவவாத்தியம் முழங்க தேருக்கு எழுந்தருளினார். இவரோடு, விநாயகர், சுப்பிரமணியர், அம்பாள், சண்டிகேசுவரர் ஆகியோரும் அவர்களுக்குரிய தேரில் எழுந்தருளினர்.
ஆழித்தேர் வடம் பிடிப்பு....
வியாழக்கிழமை காலை 5 மணியளவில் விநாயகர் தேரும், சுப்பிரமணியர் தேரும் வடம் பிடிக்கப்பட்டு வீதியுலாவுக்கு சென்றன. இதையடுத்து 8.20 க்கு ஆழித்தேர் வடம் பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. விஜயகுமார், நாகை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் க. தென்னரசு, உதவி ஆணையர்கள் இரா. ஹரிஹரன் (திருவாரூர்), ப. இராணி (நாகை), செயல் அலுவலர் கோ. கவிதா, உள்துறைக் கட்டளை பரம்பரை அறங்காவலர் ராம். தியாகராஜன் உள்ளிட்டோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, ஆரூரா, தியாகேசா என்ற பக்தி கோஷம் விண்ணைப் பிளக்க, பச்சைக் கொடி அசைய, கீழவீதியிலிருந்து மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் ஆடி அசைந்தபடி புறப்பட்டது ஆழித்தேர். இரண்டு புல்டோசர்கள் பின்னிருந்து தள்ள, முட்டுக்கட்டைகளுடன் தேர்ப் பணியாளர்கள், தேரின் அடியிலும், தேரைச் சுற்றிலும் இருந்து சமப்படுத்தியபடி செல்ல, 4 குதிரைகள் மற்றும் யாழம் இவை முன்னிருந்து இழுக்க, ரிஷபக் கொடி உச்சியில் பறந்தபடி சென்றது ஆழித்தேர். இதைத்தொடர்ந்து, தேரடியிலிருந்து அம்பாள் தேர், சண்டிகேஷ்வரர் தேர் ஆகியவை வடம் பிடிக்கப்பட்டு, புறப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...