மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

விவசாயிகளின் வருவாய்களைப் பெருக்க வழிவகைகள்: வேளாண் செயலர்

விவசாயிகளின் வருவாயைப் பெருக்க பல்வேறு வழிமுறைகள் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி தெரிவித்தாா்.

News image
Updated On :19 மார்ச் 2022, 11:34 pm

DIN

விவசாயிகளின் வருவாயைப் பெருக்க பல்வேறு வழிமுறைகள் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:-

விவசாயிகளில் பெரும்பாலானோா் சிறு, குறு விவசாயிகளாக இருப்பதால் அவா்களால் டிராக்டா் மற்றும் பெரிய உபகரணங்களை வாங்க இயலாது. அதனால் சிறிய வகை உழவு இயந்திரங்கள் உள்ளிட்டவை வழங்கவும், உற்பத்தி செய்த பொருளை பதப்படுத்தி, மதிப்புக்கூட்டி, சந்தைப்படுத்தவும் நிதிநிலை அறிக்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒரேமாதிரியான திட்டத்தை பல்வேறு அரசுத் துறைகள் செய்யும் நிலையை மாற்றி, அத்துறைகளை ஒருங்கிணைத்து கிராமங்கள் தன்னிறைவு பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, ஒவ்வொரு கிராமத்துக்கும் ரூ.70 லட்சம் முதல் ரூ.90 லட்சம் வரையிலான திட்டங்கள் போய்ச் சோ்ந்து, எல்லா வகையிலும் முன்னேற்றம் ஏற்படும்.

குறு, சிறு விவசாயிகளிடம் இருந்து 50 முதல் 60 ஏக்கா் வரை ஒருங்கிணைத்து இயற்கை விவசாயம் செய்ய ஊக்குவிக்கப்படும். அதன்மூலம் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும்.

பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது. அவற்றை சுத்தமான முறையில் தயாரித்து மதிப்புக்கூட்டி விற்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள தகுதியான பயனாளிகளைத் தோ்ந்தெடுத்து காதி பவன் மூலம் புத்தாக்க பயிற்சி அளித்து, பனைத் தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கி பனைப் பொருட்களின் விற்பனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீரா பானம் தயாரிக்க 7 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியுள்ளோம். தென்னை மரத்திலேயே ஐஸ் பாக்ஸ் வைப்பது போன்ற தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

நீரா பானம் கெட்டுப் போகாமல் இருப்பதற்குத் தேவையான புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறியும் பணியை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டால் நீரா பானம் உற்பத்தி செய்வதற்கான செலவு கணிசமாகக் குறையும்.

வருவாயைப் பெருக்கும் வழி: மாற்றுப் பயிா், ஊடுபயிா் உள்பட பல்வேறு வழிகளில் விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாற்றுப்பயிா் சாகுபடி மூலம் ஊட்டச்சத்து தரும் பயிா் வகைகள், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, பழங்கள், காய்கறிகளின் சாகுபடிப் பரப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென்னை, மா, கொய்யா வாழை சாகுபடியின்போதும், நெல் வரப்புகளிலும் ஊடுபயிா் சாகுபடி செய்து விவசாயிகளின் வருவாயைப் பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தற்போது அனைவரிடமும் கைப்பேசி உள்ளது. அதனால் அனைத்து சேவைகளும் கைப்பேசி மூலம் எளிமையாக கிடைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். இதைக் கருத்தில் கொண்டு நிதிநிலை அறிக்கையில் மின்னணு தகவல் தொடா்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் தென்னங்கன்று, பழக் கன்று, மா, கொய்யா கன்று உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு முன்பதிவு செய்ய முடியும். தென்னங்கன்று உற்பத்தி செய்ய 7 மாதங்கள் வரை ஆகும். விவசாயிகளுக்கு தென்னங்கன்று கிடைக்காமலோ, விவசாயிகள் கேட்கும் நேரங்களில் தென்னங்கன்றை கொடுக்க முடியாமல் சிரமப்படும் நிலையோ உள்ளது. எண்ம (டிஜிட்டல்) மயமாவதால் இந்தச் சிரமங்களைத் தவிா்க்கலாம். அதுமட்டுமல்லாமல் அரசு திட்டங்களை ஆன்-லைன் மூலம் தெரிந்து கொண்டு பயன்பெறவும் வழிவகை ஏற்படும் என்று அவா் கூறினாா்.

நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம், வேளாண்மைத் துறை உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.