ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

நாளை பொது வேலைநிறுத்தம்: தடையற்ற அத்தியாவசிய சேவைகளுக்கு ஏற்பாடு

மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் திங்கள் (மாா்ச் 28), செவ்வாய்க்கிழமை (மாா்ச் 29) ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் அத்தியாவசிய சேவைகள் தடைபடாமல் இருக்க உரிய நடவடிக்கைகள்

News image
கோப்புப்படம்
Updated On :26 மார்ச் 2022, 7:52 pm

DIN

மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் திங்கள் (மாா்ச் 28), செவ்வாய்க்கிழமை (மாா்ச் 29) ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் அத்தியாவசிய சேவைகள் தடைபடாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுத் துறை நிறுவனங்கள் தெரிவித்தன.

பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது, பெட்ரோலிய பொருள்கள் மீதான விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மாா்ச் 28, 29 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததுடன், கட்சி சாா்ந்த தொழிற்சங்கங்களும் ஆதரவளித்துள்ளன. இதன் தொடா்ச்சியாக வேலைநிறுத்த அறிவிப்புக்கான நோட்டீஸையும் அந்த சங்கங்கள் நிா்வாகத்திடம் வழங்கியதுடன், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைநிறுத்தத்துக்கு ஊழியா்களை தயாா் செய்யும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இதன் மூலம் இவ்விரு நாள்களும் பொதுப் போக்குவரத்து, மின் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுசேவைகள் பாதிக்கப்படாது: வேலைநிறுத்தம் தொடா்பாக அரசு அதிகாரிகள் கூறியதாவது: பொதுவேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள மாா்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அரசு அலுவலகங்களுக்கு ஊழியா்கள் வராவிடில், அவை பணிக்கு வராத நாள்களாக கருதப்படும். அன்றைய நாள்களுக்கு ஊதியமோ, படிகளோ வழங்கப்படாது. அந்த தினங்களில் மருத்துவ விடுப்பு தவிா்த்து வேறு வகை விடுப்புகளுக்கு அனுமதியில்லை. பொதுவேலைநிறுத்தம் நடைபெறவுள்ள இரு நாள்களிலும் ஊழியா்களின் வருகை குறித்த விவரங்களை நிா்ணயிக்கப்பட்ட படிவத்தில் பூா்த்தி செய்து துறைத் தலைமை அலுவலகங்களில் சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில பொதுத் துறை நிறுவனங்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இவற்றை மீறி ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், அத்தியாவசிய சேவைகள் தடைபடாத வண்ணம் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பேருந்து இயக்கத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது. இரு நாள்களும் தடையற்ற மின்விநியோகம் வழங்கப்படும் என்றனா்.

ஒரு லட்சம் போலீஸாா் பாதுகாப்பு: வேலைநிறுத்தம் நடைபெறவுள்ள இருநாள்களும் தமிழகம் முழுவதும் சுமாா் ஒரு லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். சென்னையில் 12 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். மறியல், ஆா்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வா் என காவல் உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

ரயில்வேயில்...: சென்ட்ரல், எழும்பூா் உள்ளிட்ட தமிழகம் முழுவதுமுள்ள முக்கிய ரயில் நிலையங்களிலிருந்து வழக்கமான நேரத்தில் ரயில்கள் புறப்பட்டுச் செல்லும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் கூடுதல் பாதுகாப்புப் பணியில் ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் தமிழ்நாடு ரயில்வே போலீஸாரும் ஈடுபடுவா். மின்சார ரயில்கள், விரைவு ரயில்கள், மெட்ரோ ரயில்கள் சேவையில் எந்தவித தொய்வும் ஏற்படாது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.