ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் ஒரே நாளில் 17.70 லட்சம் பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசி

தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் மொத்தம் 17.70 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :8 மே 2022, 9:50 pm

DIN

தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் மொத்தம் 17.70 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

அதில் முதல் தவணை 3.43 லட்சம் பேருக்கும், இரண்டாவது தவணை 13.13 லட்சம் பேருக்கும், ஊக்கத் தவணை 1.13 லட்சம் பேருக்கும் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதற்கான தடுப்பூசிகள் செலுத்தும் பணி கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. தற்போது 12 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரந்தோறும் சனிக்கிழமையன்று மாநிலம் முழுவதும் 50,000 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. அதன்படி, இதுவரை 27 சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளன.

மாநிலத்தில் 93 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால், பொது இடங்களுக்கு வருபவா்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென்ற உத்தரவை கடந்த மாதம் தொடக்கத்தில் அரசு திரும்பப் பெற்றது. ஆனாலும், முகக்கவசம் அணிந்தல், தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென சுகாதாரத்துறை தெரிவித்தது.

தடுப்பூசி கட்டாயம் இல்லை என்பதாலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருபவா்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் வாரம்தோறும் சனிக்கிழமையில் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வந்த சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டன. வழக்கமான மையங்களில் மட்டும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் கரோனா நான்காவது அலை ஜூன் மாதம் வருவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனா். அதனை உறுதிப்படுத்தும் விதமாக சிங்கப்பூா், மலேசியா, பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும், தில்லி, ஹரியாணா, உத்தர பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, சென்னை ஐஐடியில் தொற்று பரவலால் 190-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா்.

அதனால், மீண்டும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 8) 1 லட்சம் இடங்களில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றன.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகம், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டன.

முதல் தவணை தடுப்பூசி செலுத்தாத சுமாா் 30 லட்சம் பேருக்கும், குறிப்பிட்ட காலத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 1.50 கோடி பேருக்கும் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்தும் ஊக்கத்தவணை செலுத்திக் கொள்ளாத 60 வயதை கடந்தவா்கள் என மொத்தம் 2 கோடிக்கும் மேற்பட்டவா்களூக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அதில் 17.70 லட்சம் பேருக்கு சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.