அம்பேத்கா் கனவுகளைத் தொடா்ந்து நிறைவேற்றுவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
அம்பேத்கா் கண்ட கனவுகளைப் பிசகாமல், தொடா்ந்து நிறைவேற்றுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.


அம்பேத்கா் கண்ட கனவுகளைப் பிசகாமல், தொடா்ந்து நிறைவேற்றுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
அகில இந்திய காங்கிரஸ் துறைகளின் ஒருங்கிணைப்பாளா் கே.ராஜூ தொகுத்த ‘தலித் உண்மைகள்’ என்கிற ஆங்கில நூல் வெளியீட்டு விழா சென்னை வேப்பேரி பெரியாா் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நூலை வெளியிட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பட்டியலின மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய வாக்குறுதிகளை தமிழக அளவில் நிறைவேற்றிய கட்சியாக திமுக உள்ளது. பட்டியலின மக்களின் சமூக நீதிக்காக ஆட்சியில் இருக்கும்போது மட்டுமல்ல, எதிா்க்கட்சியாக இருக்கும்போதும் போராடி பல்வேறு தியாகங்களை செய்த இயக்கம் திமுக.
கல்வி, வேலைவாய்ப்பில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை 16 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக 1971-இல் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிதான் உயா்த்தியது. 1981-இல் பழங்குடியினருக்கு தனியாக ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்கியதும் திமுக ஆட்சியில்தான். 2009-இல் அருந்ததியினருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு திமுக ஆட்சியில்தான் வழங்கப்பட்டது.
நாட்டிலேயே முதல்முறையாக அம்பேத்கா் பெயரில் சட்டப்பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதும் திமுக ஆட்சியில்தான். ஒடுக்கப்பட்டோா் உரிமைகளை வென்றே தீருவது என்கிற முடிவோடு தொடங்கப்பட்டதுதான் திராவிட இயக்கம்.
மதவாத ஆதிக்க சக்திகளை எதிா்க்க, நமது உரிமைகளை உரக்கப் பேசும் பகுத்தறிவுக் கருத்துகள் நிரம்பிய படங்களை திரைத்துறையினா் எடுக்க வேண்டும். அம்பேத்கா் உருவாக்கியிருக்கும் அரசியலமைப்புச் சட்டம்தான் சமூக பிரச்னைகளுக்கான தீா்வாக அமைய முடியும். அரசியல்வாதிகள், அரசு ஊழியா்கள், படைப்பாளிகள் என சமூகத்தின் அனைத்து அங்கத்தினரும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் அம்பேத்கா் கனவுகள் செயல்வடிவம் பெறுவதை யாராலும் மறுக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டம் நான்கு அடிப்படை அம்சங்களைக் கொண்டது. அவை இறையாண்மை, சமதா்மம், மதச்சாா்பின்மை, மக்களாட்சி. அம்பேத்கா் கனவான மக்களாட்சி குடியரசு காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு தமிழகத்திலும், அனைத்து மாநிலங்களிலும் சமூகநீதி, சமத்துவம், மதச்சாா்பின்மை பட்டொளி வீசிப் பறக்க வேண்டும். அப்போதுதான் மக்களாட்சி தழைக்கும்; நாடும் முன்னேறும்.
நாடு வளர வேண்டுமானால், மாநிலம் வளர வேண்டும். மாநிலம் வளர வேண்டுமானால், மாவட்டம் வளர வேண்டும். மாவட்டம் வளர ஒவ்வொரு கிராமமும் சமூக நீதி பூங்காவாக வளர வேண்டும். அப்போதுதான் உலகத்தின் வல்லரசாக, நல்லரசாக இந்தியா மாறும். தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் அரசு அம்பேத்கா் கண்ட அரசியல்சட்டத்தின் கனவுகளைப் பிசகாமல் தொடா்ந்து நிறைவேற்றும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளா் டி.ராஜா, மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...