சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை: இயல்பு வாழ்கை பாதிப்பு

சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியும், குடியிருப்புகளையும் சூழ்ந்தது.
சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை: இயல்பு வாழ்கை பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியும், குடியிருப்புகளையும் சூழ்ந்தது. ஒரே இரவில் பெய்த 19 செ.மீ கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை கடந்த 29 ஆம் தேதி தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், புதன்கிழமை இரவு மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளான சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், சட்டநாதபுரம், கொள்ளிடம், திருமுல்லைவாசல், பூம்புகார், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கன மழை கொட்டி தீர்த்தது. 

சீர்காழி நகர்பகுதியில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர்.

தமிழகத்திலேயே அதிகப்படியான 19 செ.மீ மழை சீர்காழியில் பதிவாகியுள்ளது. சீர்காழி நகர்பகுதியில் வசந்தம் நகர், பாலசுப்ரமணியன் நகர், திருவள்ளுவர் நகர்,அம்மன் நகர்,எஸ்.கே.ஆர் நகர் உள்பட 20-க்கும் மேற்பட்ட குடியிருப்பு நகர் பகுதி சாலைகளில் மழைநீர் தேங்கி வீடுகளையும் சூழ்ந்துள்ளது. 

குடியிருப்பு நகர் பகுதி சாலைகளில் மழைநீர் தேங்கி வீடுகளையும் சூழ்ந்துள்ளது. 

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சிக்கு உள்பட்ட புங்கனூர் சாலையில் மழை நீர் தேங்கி உள்ளதால் இந்த சாலையின் வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். மழை நீருடன் கழிவுநீரும் கலந்திருப்பதால் சாலையோர உள்ள குடியிருப்புகளில் வாகனம் செல்லும் பொழுது தேங்கியுள்ள மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து வருவதால் வீடுகளில் உள்ள நீரினை குடியிருப்பு வாசிகள் வெளியேற்றி வருகின்றனர். 

சீர்காழி மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். 

மாவட்ட  நிர்வாகம் உடனடியாக தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com