மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஆண்கள் மட்டும் வழிபடும் அஞ்சலான்குட்டை முனியப்பன் கோயில் கும்பாபிஷேக விழா

வாழப்பாடி அருகே, ஆண்கள் மட்டும் பொங்கல் வைத்து வழிபடும் அஞ்சலான்குட்டை முனியப்பன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று வெள்ளிக்கிழமை வெகுவிமரிசையாக  நடைபெற்றது.

News image
கும்பாபிஷேக விழாவில், புதுப்பொலிவுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் மும்முனி சிலைகள்.
Updated On :4 நவம்பர் 2022, 4:12 am

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, ஆண்கள் மட்டும் பொங்கல் வைத்து வழிபடும் பழமையான அஞ்சலான்குட்டை முனியப்பன் கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று வெள்ளிக்கிழமை வெகுவிமரிசையாக  நடைபெற்றது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து 3  கி.மீ. துாரத்தில், கொட்டிப்பள்ளம் நீரோடை அருகே சிங்கிபுரம் ஊராட்சி பழனியாபுரம் காலனி எல்லை வனப்பகுதியில், 200 ஆண்டுகள் பழமையான அஞ்லான்குட்டை முனியப்பன் கோயில் அமைந்துள்ளது. 

கும்பாபிஷேக விழாவில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அஞ்சலான் குட்டை முனியப்பன்.

கும்பாபிஷேக விழாவில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அஞ்சலான் குட்டை முனியப்பன்.

கற்சிலையான மூலவர் மட்டுமின்றி, சடாமுனி, வால்முனி, செம்முனி ஆகிய ராட்சத உருவம் கொண்ட 3 முனியப்பன் சிலைகளும் கோயில் வளாகத்தில் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.

ஆள் நடமாட்டமில்லாத வனப்பகுதியில் அமைந்துள்ளதாலும், இரவு நேரத்தில் காவல் தெய்வமான ‘முனி’ உலவுவதாகவும், குறி சொல்லும் குடுகுடுப்பை வேட்டுவர்கள் சக்தி திரட்டுவதாகவும் நம்பிக்கை தொடர்வதால், இக்கோயிலுக்குபெண்கள் செல்வதில்லை. 200 ஆண்டுகளாக இக்கோயிலுக்கு பெண்கள் செல்ல அனுமதிப்பதில்லை. 

மூலவர் அஞ்சான் குட்டை முனியப்பன்

மூலவர் அஞ்சான் குட்டை முனியப்பன்

இக்கோயிலில் ஆண்களே பொங்கலிட்டு, ஆட்டுக்கிடா, கோழி பலியிட்டு, கறி சமைத்து சாமிக்கு படையல் வைத்து வழிபடும் வினோதம் இன்றளவும் மரபு மாறாமல் முன்னோர்கள் வழியாக தொடர்ந்து வருகிறது.

சக்தி வாய்ந்த காவல் தெய்வமான அஞ்சலான் குட்டை முனியப்பனுக்கு ஆண்கள் வைத்த பொங்கல் மட்டுமின்றி, சமைத்த கறியையும் பெண்கள் சாப்பிடுவதில்லை. இக்கோயில் விபூதியை கூட பெண்கள் வைத்துக் கொள்வதில்லை.

கேட்ட வரம் கொடுக்கும் இந்த முனியப்பன் கோயிலுக்கு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த ஆண்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வந்து பொங்கலிட்டு, ஆடு,கோழி பலியிட்டு கறி சமைத்து விருந்து வைத்து, நேர்த்திக்கடன் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

விழாவில் திரளாக பங்கேற்ற ஆண் பக்தர்கள்

விழாவில் திரளாக பங்கேற்ற ஆண் பக்தர்கள்

வாழப்பாடி பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோயில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு  புனரமைக்கப்பட்டது. இக்கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

யாக பூஜை அபிஷேக ஆராதனைகளுக்கு பின், முனியப்பன் மலர் மாலை அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சார்ந்த ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்களும், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல அபிஷேக பூஜைகள் நடத்திடவும், அஞ்சலான் குட்டை முனியப்பனை குல தெய்வமாக வணங்கி வரும் இப்பகுதி மக்கள்  திட்டமிட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.